செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்
லஞ்சம் இல்லாமல் அரசின் நலத் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்று சேரும் வகையில் தனி அட்டை வழங்கப்படும் என விஜய் வாக்குறுதி...
செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கன்னியாகுமரி பிரசாரத்தில் இன்று (ஏப். 12) தெரிவித்தார்.
லஞ்சம் இல்லாமல் அரசின் நலத் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்று சேரும் வகையில், அதற்காக தனி அட்டை வழங்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 6 தொகுதிகளைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று (ஏப். 12) பிரசாரம் மேற்கொண்டார்.
Advertisement
Advertisement
பிரசாரத்தில் விஜய் பேசியதாவது:
''கன்னியாகுமரி, காரைக்குடி மக்களுக்கு வணக்கம். அன்று காரைக்குடியில் பேசமுடியாமல் போனது.
தவெக ஆட்சி அமைந்ததும் அரசின் நலத்திட்டங்களைப் பெற மக்கள், லஞ்சம் கொடுத்து வேதனை அடையத் தேவையில்லை, வீட்டு வாசலில் அரசாங்கத் திட்டங்கள் வந்து சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக புதிய செயலி அறிமுகம் செய்யப்படும்.
இதில், ஒவ்வொரு குடும்பத்தின் விவரங்களும் இடம்பெறும். ரேஷன் உள்பட அவர்களுக்குத் தேவையான அரசின் திட்டங்கள் அனைத்தும் அச்செயலி மூலமே கோரிக்கையாகப் பெறப்பட்டு செய்து கொடுக்கப்படும்.
இதற்காக தமிழ்நாடு சேவை உரிமைச் சட்டம், வெற்றி தமிழ்நாடு சூப்பர் என்ற செயலிகள் உருவாக்கப்படும். இது ஸ்டாலின் சார் விடும் கதை அல்ல, அறிவியல் பூர்வமாக சாத்தியமான ஒன்றைத்தான் சொல்கிறேன்.
தமிழக அரசின் பட்ஜெட், நிதி ஒதுக்கீடு எல்லாம் சிதம்பர ரகசியம் போன்று உள்ளது. அதனை தவெக எளிமையாக்கும்.
இடைத்தரகர்கள், லஞ்சம் இல்லாமல் அரசின் ஒவ்வொரு திட்டமும் மக்கள் அனைவருக்கும் சென்று சேரும். இப்போதுள்ள அரசாங்கம் இது சரியில்லை, அது சரியில்லை என்று காரணம் கூறுகிறது. தவெக அவர்களில் இருந்து வேறுபட்டது.
கடந்த 70 ஆண்டுகளை விட, திமுக ஆட்சி செய்த கடந்த 5 ஆண்டுகளில் அதிக கடன் வாங்கியுள்ளோம். இது மக்கள் தலையில்தான் சென்று சேர்கிறது.
நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி, மக்களுக்கு சேவை செய்ய முடியாது என அரசாங்கம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். இதற்கு பெயர் நல்ல ஆட்சி அல்ல; துன்புறுத்தல் ஆட்சி. இதனை முதலில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அதை நாம் மாற்றுவோம்.
தவெக ஆட்சியில், மக்கள் வெறும் வாக்காளர்களாக மட்டும் இல்லாமல், ஆட்சியின் பங்காளர்களாகவும் இருப்பார்கள். இதற்காக செயலி உருவாக்கப்பட்டு, அதில் மக்கள் தங்கள் யோசனைகளை வழங்கலாம்.
செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாற்றப்படும். பொறியியல் திறமையுடன் பொருளாதாரம் தனதாக்கப்படும். சேலம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் செயற்கை நுண்ணறிவு புத்தாக்க மையங்கள் அமைக்கப்படும்.
5 லட்சம் கையெழுத்துடன் இடம்பெறும் யோசனைகள், மனுக்கள் குறித்து சட்டப்பேரவையில் தனியாக விவாதிக்கப்படும். சட்டப்பேரவையில் ஒரு நாள் முழுவதும் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுவதற்காக ஒதுக்கப்படும்'' என விஜய் பேசினார்.