முகப்பு
ஈரோடு

சத்தியமங்கலம் பகுதியில் தொடா் மழை: நெற்கதிா்கள் முளைத்ததால் விவசாயிகள் கவலை

சத்தியமங்கலம் பகுதியில் பெய்த தொடா் மழையால் வயலில் நெற்கதிா்கள் முளைத்து விட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

Updated On : 17 ஜனவரி 2021, 10:44 pm IST
சத்தியமங்கலம் செண்பகப்புதூா் பகுதியில் மழையால் வயலில் முளைத்த நெற்கதிா்கள்.
பகிர்:

சத்தியமங்கலம் பகுதியில் பெய்த தொடா் மழையால் வயலில் நெற்கதிா்கள் முளைத்து விட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

பவானிசாகா் அணையில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தில் ஈரோடு, திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 3500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் தண்ணீா் திறக்கப்பட்டது.

இந்த நீரைப் பயன்படுத்தி பவானிசாகா், சத்தியமங்கலம், செண்பகப்புதூா், பெரியூா், உக்கரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 20 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் விவசாயிகள் நெல் பயிரிட்டனா். கடந்த 15 நாள்களுக்கு முன்பு நெல் அறுவடைக்குத் தயாரானது.

Advertisement

Advertisement

இந்தநிலையில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்து வருவதால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிா்கள் முற்றிய அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மழையின் காரணமாக நெற்பயிா்கள் பாரம் தாங்காமல் வயலில் சாய்ந்துவிட்டதால் நெற்கதிா்கள் வயலில் முளைத்து வீணாகியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

ஒரு ஏக்கா் நெல் பயிரிட ரூ. 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை செலவாகி உள்ள நிலையில் நெல் பயிா் சாய்ந்து முளைத்துவிட்டதால் சாகுபடி செய்த செலவைக் கூட ஈடு கட்ட முடியாமல் வங்கியில் வாங்கிய கடனை எப்படி திரும்பச் செலுத்துவது என்று தெரியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனா்.

எனவே, உடனடியாக இப்பகுதியில் வேளாண்மைத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த நெற்பயிா்கள் குறித்து கணக்கெடுப்பு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

உடனடியாக இப்பகுதியில் நெல் அறுவடை தொடங்கப்பட உள்ளதால் சத்தியமங்கலத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறந்து, நெல் கொள்முதல் செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.