முகப்பு
அரை நூற்றாண்டுக்கு முன்

13.4.1976: அவசர நிலையை நீக்க பிரதமர் இந்திரா நிபந்தனை

அவசர நிலையை நீக்க பிரதமர் இந்திரா நிபந்தனை...

Updated On : 13 ஏப்ரல் 2026, 4:17 am IST
13.4.1976 - Dinamani
பகிர்:

ரேபராலி, ஏப்: 12- ஜனநாயகத்தில் மிக முக்யமான ஜீவாதார அடிப்படை மக்கள் குரலேயன்றி தேர்தலும், பத்திரிகைகளும் அல்ல என்று பிரதம மந்திரி இந்திராகாந்தி இன்று இங்கு கூறினார். அவசர நிலை நிரந்தரமானதல்ல. இதனை நீக்குவது வன்செயல்களைப் போதித்து, பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டவர்களைப் பொறுத்து உள்ளது என்று அவர் சொன்னார்.

வளர்ச்சி மகா நாட்டில் அவர் உரை நிகழ்த்தினார். அவரது தொகுதியில் பல்வேறு துறைகளில் அடைந்த முன்னேற்றத்தை மகாநாடு விமர்சிப்பதுடன், மக்களின் பிரச்னைகளையும் விவாதிக்கிறது.

ஜனநாயகத்தைப் பற்றி பேசுவோர் அதன் அடிப்படைகளை மறந்து விடுகின்றனர். ஜனநாயகத்தின் முக்யமான அடிப்படை மக்கள் குரலேயாகும். மக்களின் குரலைக் கேட்டு, மதித்து செயல்பட வேண்டும். தேர்தல்களும் பத்திரிகைகளும் ஜனநாயகத்தின் முழு அமைப்பாகிவிடாது என்று இந்திரா காந்தி மேலும் கூறினார்.

Advertisement

Advertisement

அரசியல் சட்டத்தில் மாற்றம் குறித்து வழக்கறிஞர்கள், நிபுணர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் உப கமிட்டி யொன்று இப்பிரச்னையை ஆராய்ந்துள்ளது. ஆனால் பெரும்பான்மையினரின் கருத்தைப் பிரதிபலிக்கும் ரீதியில் மக்கள் குரல் அரசியலமைப்புக்கும், பார்லிமெண்டரி ஜனநாயகத்துக்கும் அடிப்படையாக அமைய வேண்டும். அதேசமயத்தில் சிறுபான்மையோரை பெரும்பான்மையோர் விரட்டுவதும் சரியல்ல. பதிலுக்குப் பெரும்பான்மையோர் குரலை ஒடுக்க சிறுபான்மையோர் முயற்சிக்கக் கூடாது என்று பிரதம மந்திரி குறிப்பிட்டார்.

அவசர நிலையை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை இந்திரா காந்தி குறிப்பிடுகையில் இதனை அமலாக்க நேர்ந்த நிலவரத்தை ஆராய வேண்டும் என்று கூறினார். வன்செயலில் நம்பிக்கை இல்லை என்று கூறினால் மட்டும் போதாது என்றும், அதனைச் செயல் மூலம் நிரூபித்துக் காட்ட வேண்டும் என்றும், அவசர நிலையை நீக்குவதற்கு ஏற்ற மாறுபட்ட சூழ்நிலையைத் தோற்றுவிக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

தேசிய ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதம மந்திரி வலியுறுத்தினார். சிறு தொழில்கள், குடிசைக் கைத் தொழில்கள் வளர்ச்சியின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

ஹோட்டல் பண்டங்கள் விலை நிர்ணயம்

சென்னை ஏப், 12- தமிழ்நாடு பூராவிலும் ஹோட்டல்களில் தின்பண்டங்களுக்கான உயர்ந்த பட்ச விலைகளையும், அளவு எடைகளையும், நிர்ணயித்து இந்தியப் பாதுகாப்புச் சட்ட விதிகளின் கீழ் தமிழ்நாடு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அளவு, விலைக் கட்டுப்பாடுகள் மீறப்பட்டால், ஹோட்டல்களின் லைசென்ஸ்கள் ரத்து செய்யப்படுவதற்கான முகாந்தரமாகும் என்று கவர்னர் கே.கே. ஷா எச்சரித்தார். இது நாளை முதலே அமலுக்கு வரும்.

1971 ஆம் ஆண்டு இந்தியப் பாதுகாப்புச் சட்ட 114-வது விதியின் கீழ், 1976 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஹோட்டல் ஸ்தாபனங்கள் (உணவுப் பண்டங்களின் விலைகள் நிர்ணயம், விளம்பரம்) உத்தரவு இந்திய அரசாங்கத்தின் சம்மதத்துடன் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பூராவிலும் உள்ள ஹோட்டல்களில் சாப்பாடு, காபி, பலகாரம் ஆகியவற்றின் அளவு, எடை, நிறை, விலை ஆகியவற்றைச் சட்டபூர்வமாக நிர்ணயித்துள்ளது. தமிழ் புத்தாண்டு தினமான இன்று (செவ்வாய்க் கிழமை) முதல் இந்த உத்திரவு மாநிலம் பூராவும் அமலுக்கு வரும் என்று தமிழக கவர்னர் கே.கே. ஷா அறிவித்தார். ...

summary

Prime Minister Indira Sets Condition for Lifting Emergency

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.