1.5.1976: மொழித் திணிப்புக்கு பிரதமர் இந்திரா காந்தி எதிர்ப்பு!
மொழித் திணிப்புக்கு பிரதமர் இந்திரா காந்தி எதிர்ப்பு தெரிவித்தது பற்றி...
புதுடில்லி, ஏப். 30- யார் மீதும் எந்த ஒரு மொழியையும் திணிப்பதை தாம் எதிர்ப்பதாக பிரதமர் இந்திரா காந்தி இன்று ஊர்ஜிதம் செய்தார்.
முன்பே இந்த உறுதி மொழியை அளித்திருப்பதாகவும், பல தடவை தாம் யார் மீதும் மொழியைத் திணிப்பதில் தங்களுக்கு நம்பிக்கை இல்லையென்று மீண்டும் உறுதி மொழியளிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.
டில்லி தமிழ் கல்வி சங்கத்தின் பொன் விழாக் கொண்டாட்டத்தை துவக்கி வைத்து பிரதமர் பேசினார். டில்லியில் 7 பள்ளிகளை இந்த ஸ்தாபனம் நடத்தி வருகிறது.
Advertisement
Advertisement
மும்மொழி திட்டத்தை சிலாகித்து அவர் பேசினார். குழந்தைகள் கூடுமானவரை பல இந்திய மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
சில சந்தர்ப்பங்களில் மொழியானது சர்ச்சைக்குரிய விஷயமாகிவிட்டிருப்பது குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார்.
சில சந்தர்ப்பங்களில் மொழி பற்றிய காரணமாகவும், சில சந்தர்ப்பங்களில் அரசியல் நோக்கங்களுக்காகவும் இதர நோக்கங்களுக்காகவும் மொழிப் பிரச்னையை பயன்படுத்திக் கொள்ளும் காரணமாகவும் மொழி சர்ச்சை ஏற்படுகிறது என்றார் பிரதமர்.
ஹிந்தியை வன்மையாகவும் ஆக்கிரோஷமாகவும், ஆதரிப்பவர்களால் எப்படி இறுதியில் ஹிந்திக்கு பெரும் தீங்கு ஏற்பட்டிருக்கிறது என்பது நாம் அறிந்ததே என்றும் பிரதமர் சொன்னார்.
தாய் மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். தாய் மொழி மூலமாக அல்லாது, யாரும் சரிவர கல்வி பயல முடியாது என்றார். அதனால் தான் அங்கீகரிக்கப்பட்ட 15 பிராந்திய மொழிகளுக்கும், ஆங்கிலத்துக்கும், ஆக மொத்தம் 16 மொழிகளுக்கு, ஊக்கமளிக்கப்படுகிறது என்றார் பிரதமர்.
மும்மொழி திட்டம் வகுக்கப்பட்டதற்கான காரணத்தை பிரதமர் விளக்குகையில் ஒரு தேசிய தொடர்பு மொழியும், ஒரு சர்வதேசிய தொடர்பு மொழியும் குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் அவர்களுக்கு எந்த பகுதியில் வசிப்பவர்களாய் இருந்த போதிலும் சம வாய்ப்புகள் கிடைக்கும் என்றார். இல்லையேல் உலகின் இதர பகுதிகளுடன் தொடர்பு இழந்தவர்களாக இருக்க வேண்டி வரும் என்றார். ...
May 1, 1976: Prime Minister Indira Gandhi Opposes Imposition of Language!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.