பிரதமர் மோடி இன்று பிரான்ஸ், ஸ்லோவாக்கியா பயணம்!
பிரதமர் நரேந்திர மோடி 6 நாள்கள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியாவுக்கு இன்று(ஜூன் 13) செல்வது குறித்து...
பிரதமர் நரேந்திர மோடி 6 நாள்கள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியாவுக்கு இன்று(ஜூன் 13) செல்கிறார்.
ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா உடனான இந்தியாவின் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை(ஜூன் 13) முதல் ஆறு நாள் அரசு முறை பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இந்தப் பயணம், ஐரோப்பிய நாடுகளுடனான இந்தியாவின் விரிவான உத்திசார் கூட்டாண்மையை முன்னெடுத்துச் செல்வதில் இந்தியா கொண்டுள்ள உறுதிப்பாட்டை இந்தப் பயணம் மீண்டும் உறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்தப் பயணத்தின் முதலில் 'நீஸ்' நகருக்குச் செல்லும் அவர், அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானைச் சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பின்போது, இரு தலைவர்களும் இந்தியா-பிரான்ஸ் இடையிலான இருதரப்பு உறவுகளின் அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்வார்கள்; அத்துடன், இந்தியா, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த முன்னணி புத்தாக்க ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மற்றும் வென்ச்சர் கேப்பிட்டல் உள்ளிட்ட நிறுவனங்களை ஒன்றிணைக்கும் 'பாரத் இன்னோவேட்ஸ்' நிகழ்ச்சியை கூட்டாகத் தொடங்கி வைக்கிறார்கள்.
பிரான்ஸ் பயணத்தை முடித்ததும், ஸ்லோவாக்கியா செல்கிறார். அந்த நாடு 1993 இல் விடுதலை பெற்ற பிறகு இந்திய பிரதமர் செல்லும் முதல் சுற்றுப்பயணமாகும். இந்த பயணத்தின் போது ஸ்லோவாக்கியப் பிரதமர் ராபர்ட் ஃபிகோவைச் சந்தித்துப் பேசுகிறார். அப்போது இருதரப்பு வணிகம், ஆட்டோமொபைல், ரயில் உள்ளிட்ட உற்பத்தி துறை சார்ந்தும், ஒத்துழைப்புக்கான புதிய வழிகள் தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
பயணத்தின் மூன்றாம் கட்டமாக, வரும் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் பிரான்ஸின் 'எவியன்' நகரில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த மாநாட்டின் போது, ஜி7 தலைவர்கள் மற்றும் இதில் பங்கேற்பதற்கு அழைக்கப்பட்டுள்ள நட்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் அவர் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்.
இறுதியாக, ஜூன் 18 இல் பாரீஸ் நகருக்குச் செல்லும் பிரதமர், அங்கு கூடுதல் இருதரப்பு சந்திப்புகளில் ஈடுபடுவதுடன், ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் ஸ்டார்ட்-அப் நிகழ்வான 'விவாடெக்' உச்சிமாநாட்டிலும் பங்கேற்கிறார்.
பாரீஸில் வசிக்கும் இந்தியச் சமூகத்தினரிடையே மோடி உரையாற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமரின் பங்கேற்பானது, 'குளோபல் சவுத்' (வளரும் நாடுகள்) அமைப்பின் முன்னணி குரலாகவும், உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் முக்கிய கூட்டாளியாகவும் இந்தியா வகிக்கும் பங்கை வெளிப்படுத்துகிறது.
Prime Minister Narendra Modi will embark on a six-day visit to France and Slovakia from today to further deepen India’s partnership with the two European nations.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.