3 நாடுகளுக்கு பயணம்! பிரதமர் மோடி புறப்பட்டார்!
இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து நாடுகளுக்கு பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றது பற்றி...
பிரதமா் நரேந்திர மோடி இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய 3 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக தில்லியிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
மூன்று நாடுகள் பயணத்தின் முதல் கட்டமாக, இந்தோனேசியாவுக்குச் செல்லும் பிரதமா், பின்னா் ஆஸ்திரேலியாவுக்கும், அதைத் தொடா்ந்து நியூஸிலாந்துக்கும் செல்லவுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு பிறகு, இந்தியப் பிரதமா் ஒருவா் நியூஸிலாந்துக்கு கடந்த 40 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறையாக செல்கிறார்.
Advertisement
Advertisement
கடந்த ஏப்ரலில் கையொப்பமிடப்பட்ட நியூஸிலாந்து - இந்தியா தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இருதரப்பு உறவுகள் அடுத்தகட்டத்துக்கு இட்டுச் செல்லப்பட்டுள்ளன.
இந்த பயணம் தொடர்பாக தில்லியிலிருந்து புறப்படுவதற்கு முன், பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
”ஜூலை 6 முதல் 11 வரை இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கு நான் பயணம் மேற்கொள்ளவுள்ளேன்.
இந்தோனேசியக் குடியரசின் பிரபோவோ சுபியான்டோவின் அழைப்பின் பேரில், ஜூலை 6 முதல் 8 வரை இந்தோனேசியாவிற்குப் பயணம் மேற்கொள்கிறேன். 2018-இல் நான் இந்தோனேசியாவுக்கு மேற்கொண்ட முதல் பயணத்தின்போது, இந்தியா - இந்தோனேசியா இடையேயான இருதரப்பு கூட்டாண்மை மேலும் வலுவடைந்தது. இந்தியாவும் இந்தோனேசியாவும் வலுவான நாகரிக மற்றும் மக்கள் இடையிலான உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. எனது இந்தப் பயணம் நமது பன்முகத்தன்மை கொண்ட கூட்டாண்மையின் அனைத்து அம்சங்களையும் மேலும் வலுப்படுத்தும். இந்தப் பயணத்தின்போது, இந்தோனேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினருடன் நான் கலந்துரையாடவுள்ளேன். நமது நெருங்கிய கலாச்சார உறவுகளுக்குச் சான்றாகத் திகழும் யோக்யகர்த்தாவில் உள்ள பிரம்பனன் கோயிலை அதிபர் பிரபோவோவுடன் இணைந்து பார்வையிடவுள்ளேன்.
இந்தோனேசியாவிலிருந்து, ஆஸ்திரேலியப் பிரதமரின் அழைப்பின் பேரில் மெல்போர்னுக்குச் செல்கிறேன். பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடுகள், கல்வி தொடர்பாக அந்நாட்டு பிரதமருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறேன்.
தொடர்ந்து, நியூசிலாந்தின் ஆக்லாந்து செல்லவுள்ளேன். இந்த பயணத்தின்போது, இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதாரம், வர்த்தகத்தை எவ்வாறு மேலும் மேம்படுத்துவது என்பது குறித்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனுடன் விவாதிக்கவுள்ளேன்.
கிழக்கு மற்றும் தெற்கு இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைந்துள்ள இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா, அதனைத் தொடர்ந்து நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு நான் மேற்கொள்ளவிருக்கும் இந்தப் பயணம், இந்தியாவின் 'ஆக்ட் ஈஸ்ட்' (Act East) கொள்கை, 'மகாசாகர்' (MAHASAGAR) தொலைநோக்குப் பார்வை மற்றும் சுதந்திரமான, திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியம் குறித்த நமது அணுகுமுறை ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
PM Modi departure to Indonesia, Australia and New Zealand
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.