16.5.1976: சினிமாவில் வன்முறை, ஆபாச காட்சிகள் தடை: மந்திரி கண்டிப்பு
சினிமாவில் வன்முறை, ஆபாச காட்சிகள் தடை...
பம்பாய் மே. 14 - இந்திய திரைப்படங்களிலிருந்து வன்முறை, குரூரம், ஆபாசகரமான செக்ஸ் காட்சிகள் முதலியவற்றை ஒழிப்பதற்கு, அரசு ஓர் உறுதியான முடிவு மேற்கொண்டுள்ளது என்று மத்ய தகவல் ஒலிபரப்பு மந்திரி லி.சி. சுக்லா கூறியுள்ளார். இது விஷயமான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படா என்று அவர் அறிவித்தார்.
பம்பாய், தென் பிராந்தியம் ஆகியவற்றின் சினிமாத்துறை பிரதிநிதிகள் கூட்டத்தில் பம்பாயில் வியாழனன்று அவர் உரை நிகழ்த்தினார். இத்தகைய காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டு இருந்தாலும், இவை இல்லாதவாறு கதையைத் திருத்தி அமைத்து மறு படப்பிடிப்பு நடத்துமாறு அவர் யோசனை கூறினார்.
பிலிம் பைனான்ஸ் கார்ப்பரேஷன், இந்திய திரைப்பட ஏற்றுமதி கார்ப்பரேஷன் ஆகியவற்றின் செயல் திறனை மேம்படுத்த அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். பிலிம் பைனான்ஸ் கார்ப்பரேஷனின் நோக்கம், செயல்முறை ஆகியவற்றைப் பொருத்தமட்டில், அரசின் கொள்கையில் மாற்றம் ஏதும் இல்லை என்று அவர் சொன்னார்.
Advertisement
Advertisement
புதுவையில் மது, கரும்புக்கு விற்பனை வரி உயர்வு
பாண்டிச்சேரி, மே.15- பாண்டிச்சேரியில் இன்று முதல், சாராய பட்டையையும் கள்ளையும் தவிர மற்ற மதுவகைகளின் விலைகள் உயரும். அவைகளின் மீது விதிக்கப்படும் விற்பனை வரி உயர்ந்துள்ளதே காரணம்.
பாண்டிச்சேரி பொது விற்பனை வரி (திருத்த) விதிகளை இன்று ராஷ்டிரபதி பிரகடனம் செய்தார். இதன்படி மதுவகைகளின் மீதுள்ள ஒருகட்ட விற்பனை வரி 10 சதவிகிதத்திலிருந்து 14 சதவிகிதமாக உயருகிறது. சாராயப்பட்டை மீதுள்ள வரி 5 சதவிகிதத்திலிருந்து மேலும் ஒரு சதவிகிதம் உயருகிறது.
கரும்புக்கு இதுவரை விற்பனை வரி 7 சதவிகிதமாகவும், இரும்பு உருக்குக்கு 2 சதவிகிதமாகவும் இருந்தது. இப்போது அது முறையே 10 சதவிகிதமாகவும், 3 சதவிகிதமாகவும் உயருகிறது.
ஆனால் மோட்டார் கார்கள்; டாக்ஸி வண்டிகள் ஆகியவை மீதுள்ள விற்பனை வரி மட்டும் 12 சதவிகிதத்திலிருந்து 6 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.
Ban on Violence and Obscene Scenes in Cinema: Minister Issues Stern Warning
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.