அன்னிய முதலீட்டை ஈர்க்க மேலும் பல நடவடிக்கைகள்: ப.சிதம்பரம் அறிவிப்பு
அன்னிய முதலீட்டை ஈர்க்க மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர்
அன்னிய முதலீட்டை ஈர்க்க மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களை ஈர்ப்பதற்காக "உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்' என்ற முறையில் புதிய விதிமுறைகளை சேர்க்க இருப்பதாகவும் அவர் அறிவித்தார். ஓய்வூதியம், காப்பீடு, வங்கித் துறை, பங்குச் சந்தை என பல்வேறு துறைகளில் அன்னிய முதலீடு செய்யப்பட்டாலும், அவை அனைத்துக்கும் பொதுவான விதிமுறைகளை அரசு விரைவில் வகுக்கும்.
இப்போது மொத்தம் 1,756 பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் உள்ளன. இவற்றை இந்திய பங்கு பரிவர்த்தனை மையத்தில் (செபி) பதிவு செய்ய குறைந்தபட்சம் 3 வாரங்கள் ஆகும்.
Advertisement
கடந்த 2012-ம் ஆண்டில் மொத்தம் 31 பில்லியன் அமெரிக்க டாலர், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் மூலம் இந்தியாவுக்கு வந்தது. இந்த ஆண்டில் ஜனவரி முதல் இப்போது வரை மட்டுமே 10 பில்லியன் அமெரிக்க டாலர் வந்துள்ளது.
"பங்குச் சந்தை உயரும்' பங்குச் சந்தை 25 சதவீதம் அளவுக்கு உயர்ந்து, முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை அளித்துள்ளது. எனவே எதிர்காலத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் பலர் நமது பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பங்குச் சந்தை தொடர்ந்து முன்னேற்றமடையும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
அதே நேரத்தில் ஒரு நிறுவனத்தின் உள் விவகாரங்களை முறைகேடாகத் தெரிந்து கொண்டு அதில் முதலீடு செய்வது, அல்லது முதலீட்டை எடுப்பது (இன்சைடர் டிரேடிங்) என்பது பெரிய குற்றம். இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ப.சிதம்பரம் எச்சரித்தார்.
நிலக்கரி துறை பிரச்னை: பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா சார்பில் 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் நிலக்கரியை தூய்மைப்படுத்தும் நிலையம் ஒன்று கூட அமைக்கப்படவில்லை. சரியான நிலம் கிடைக்காதது, சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கிடைக்காதது போன்றவையே இதற்குக் காரணம். இத்தகவலை மத்திய நிலக்கரி துறை இணையமைச்சர் பிரதீக் பிரகாஷ் பாபு மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மத்திய அரசிடம் தகவல் இல்லை: தொழில் நிறுவனங்கள் தங்களது சராசரி லாபத்தில் 2 சதவீதத்தை சமூக மேம்பாட்டுக்காக செலவிட வேண்டும் என்ற புதிய நிறுவனங்கள் சட்டம் மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த மத்திய நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் சச்சின் பைலட், இப்போது வரை தொழில் நிறுவனங்கள் சமூக மேம்பாட்டுக்காக எவ்வளவு செலவிட்டன என்பது தொடர்பான விவரங்கள் அரசிடம் இல்லை என்று தெரிவித்தார்.
மாநிலங்களில் தண்ணீர் பஞ்சம்: மாநிலங்களில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறை பிரச்னை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை இணையமைச்சர் பரத் சிங் சோலங்கி, "மகாராஷ்டிரம், குஜராத், கர்நாடகம், ராஜஸ்தான், கேரளம் ஆகியவை குடிநீர் பிரச்னையைத் தீர்க்க மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளன. இது தொடர்பான உயர்நிலைக் குழு அளிக்கும் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு உதவிகளை மேற்கொள்ளும்' என்றார்.
நீதிபதி நியமன முறையில் மாற்றம்: நீதிபதிகளை நியமனம் செய்யும் முறையில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வர இருப்பதாக சட்டத் துறை அமைச்சர் அஸ்வினி குமார், மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தார். இது தொடர்பாக ஒருமித்த கருத்தை எட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. நீதித்துறையின் ஒருமைப்பாடு குறையாமல் மாற்று வழிமுறை கண்டறியப்படும் என்றும் அமைச்சர் அஸ்வினி குமார் கூறினார்.