முகப்பு
இந்தியா

எல்லைக்கு அப்பால் 3,974 பயங்கரவாதிகள்: ஒமர் அப்துல்லா

இந்தியா மீது தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் பாகிஸ்தான் பகுதியில் 3,974 பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று வருவதாக

Updated On : 12 மார்ச், 2013 at 1:16 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:05 PM

இந்தியா மீது தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் பாகிஸ்தான் பகுதியில் 3,974 பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது என்று ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.

காஷ்மீர் சட்டப் பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. பாகிஸ்தானில் பயிற்சி பெற்று வரும் பயங்கரவாதிகள் குறித்த உளவுத் துறையின் அறிக்கை குறித்து எம்.எல்.ஏ. சமன் லால் குப்தா கேள்வி கேட்டார்.

அதற்கு முதல்வர் ஒமர் அப்துல்லா எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்  கூறியுள்ளதாவது: பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் 3,974 பயங்கரவாதிகள் வசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

1,811 பேருக்கு பொதுமன்னிப்பு: மற்றொரு கேள்விக்கு பதிலளித்து ஒமர் அப்துல்லா கூறியதாவது: 2010-ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தின்போது வன்முறையில் ஈடுபட்டதாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதில் கல்வீச்சில் ஈடுபட்டதாக 1,811 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி, வழக்கிலிருந்து விடுவிக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பெரும்பாலும் இளைஞர்களான இந்த 1,811 பேரின் கல்வி, வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது எனக் கருதியே இந்நடவடிக்கையை எடுத்துள்ளேன்.

அதே சமயம் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிக்கும் வகையில் தீவைப்புச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்கு ரத்து செய்யப்படவில்லை'' என்று ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

வெளிநடப்பு: சமீப காலமாக போராட்டக்காரர்களை கலைக்க மிளகு கலந்த வாயுவை போலீஸார் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.