முகப்பு
இந்தியா

சி.டி.எம்.ஏ. 2ஜி ஏலத்தில் எஸ்.எஸ்.டி.எல். வெற்றி

சி.டி.எம்.ஏ. செல்போன் சேவைக்கான 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஏலத்தில், சிஸ்டெமா ஷியாம் டெலி சர்வீசஸ் (எஸ்.எஸ்.டி.எல்.)

Updated On : 12 மார்ச் 2013, 12:55 am IST
பகிர்:

சி.டி.எம்.ஏ. செல்போன் சேவைக்கான 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஏலத்தில், சிஸ்டெமா ஷியாம் டெலி சர்வீசஸ் (எஸ்.எஸ்.டி.எல்.) வெற்றி பெற்றது. எனினும் இந்த ஏலத்தில் இந்த நிறுவனத்தைத் தவிர வேறு எந்த நிறுவனமும் பங்கேற்கவில்லை. இதன் மூலம் அரசுக்கு ரூ.3,639 கோடி வருமானம் கிடைக்கும்.

 சி.டி.எம்.ஏ. செல்போன்களுக்கான அலைக்கற்றை ஏலம் திங்கள்கிழமை தொடங்கியது. இணையதளம் வழியாக நடைபெற்ற இந்த ஏலம், 4 மணி நேரத்தில் முடிந்து விட்டது. மூன்று சுற்றுகளாக நடைபெற்ற இதில் ரஷியாவின் சிஸ்டெமா  நிறுவனத்தின் இந்தியப் பிரிவான எஸ்.எஸ்.டி.எல். மட்டுமே பங்கேற்று வெற்றி பெற்றது என தொலைத்தொடர்புத் துறை செயலாளர் ஆர். சந்திரசேகர் தெரிவித்தார்.

 இந்த ஏலத்தில் பங்கேற்பதற்காக இந்நிறுவனம் ரூ.613.75 கோடி டெபாசிட் செய்திருந்தது. இதன்மூலம், 11 தொலைத் தொடர்பு வட்டங்களுக்கான 2.5 மெஹா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்க தகுதி பெற்றது. எனினும், தலா 3 பகுதிகளை உள்ளடக்கிய 8 வட்டங்களுக்கு மட்டுமே ஏலத்தில் பங்கேற்றது. இதற்காக ரூ.3,639 கோடி தர ஒப்புக் கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

 எனினும், இந்நிறுவனம் ஏற்கெனவே செலுத்தி உள்ள ரூ.1,626 கோடி கழித்துக் கொள்ளப்படும் என்பதால் இப்போதைக்கு அரசுக்கு எவ்விதத் தொகையும் செலுத்த வேண்டியிருக்காது. அதாவது மொத்த ஏலத் தொகையில் 25 சதவீதத்தை 10 நாள்களுக்குள் செலுத்த வேண்டும். மீதம் உள்ள தொகையை 2016ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு தவணை முறையில் செலுத்த வேண்டும்.

 மொத்தம் 61 பகுதிகளுக்கு ஏலம் நடைபெற்றது. ஆனால் 24 பகுதிகளுக்கு மட்டுமே ஏலம் கேட்கப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளது.

 மும்பை, மகாராஷ்டிரம் மற்றும் உத்தரப் பிரதேசம் கிழக்கு ஆகியவற்றுக்கு ஏலம் கேட்கப்படவில்லை. மொத்தம் உள்ள 22 தொலைத் தொடர்பு வட்டங்களில் 10 வட்டங்களிலிருந்து வெளியேறுவதாக எஸ்எஸ்டிஎல் நிறுவனம் ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததால், 122 உரிமங்களை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், புதிதாக ஏலம் நடத்தி மீண்டும் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டது. இதில் எஸ்எஸ்டிஎல் நிறுவனத்தின் 21 உரிமங்களும் அடக்கம்.

 உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, 2ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. 3 நாள்கள் நடைபெற்ற இந்த ஏலத்தில் ஜிஎஸ்எம் செல்போன் சேவைகளுக்கான ஏலம் மூலம் அரசுக்கு ரூ.9,407 கோடி கிடைத்தது. இது எதிர்பார்த்த தொகையைவிடக் குறைவு.

 ஏலத்தில் பங்கேற்பதற்கான குறைந்தபட்ச தொகையை அதிகமாக நிர்ணயித்ததால், சி.டி.எம்.ஏ. நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்கவில்லை. இதையடுத்து, அப்போது நிர்ணயிக்கப்பட்ட தொகை பாதியாகக் குறைக்கப்பட்டு இப்போது ஏலம் நடைபெற்றது. ஆனாலும் ஒரேநிறுவனம்தான் ஏலத்தில் பங்கேற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 2010ஆம் ஆண்டு நடைபெற்ற 3ஜி சேவைகளுக்கான ஏலம் 183 சுற்றுகளுடன் 34 நாள்களுக்கு நீடித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.