முகப்பு
இந்தியா

மாநிலங்களவையில் விவாதமின்றி பட்ஜெட் மசோதா நிறைவேறியது

நேரமின்மை காரணமாக மத்திய பட்ஜெட் மாநிலங்களவையில் விவாதமின்றி வியாழக்கிழமை

Updated On : 22 மார்ச் 2013, 2:29 am IST
பகிர்:

நேரமின்மை காரணமாக மத்திய பட்ஜெட் மாநிலங்களவையில் விவாதமின்றி வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒரு மாத இடைவேளை தொடங்க ஒரு நாள் மட்டுமே உள்ளது. இந்நிலையில் 2013-2014-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை குறித்து மாநிலங்களவை உறுப்பினர்கள் முழுமையாக விவாதிக்க போதுமான அவகாசம் இல்லையென்பதால் உறுப்பினர்கள் தங்களது பட்ஜெட் மீதான கருத்துகளை எழுத்து மூலம் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

 மாநிலங்களவையை அப்போது நடத்திக் கொண்டிருந்த இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் இவ்வாறு உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

உறுப்பினர்கள் 400 வார்த்தைகளில் தங்களது கருத்துகளை தெரிவிக்க வேண்டுமென்று மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி முடிவு செய்ததாக சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.

அவையில் இதனை தாக்கல் செய்யலாம் அல்லது இணையதளம் மூலமாகவும் பின்னர் அவர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்றும் அப்படிச் செய்தாலும் அது அவை நடவடிக்கையாகவே எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

பாரதிய ஜனதா கட்சி, ஐக்கிய ஜனதா தளம், சமாஜவாதி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தன.

யார் இதுபோன்ற முடிவெடுப்பது? இது வரை இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்ததே இல்லை. அவை நடவடிக்கைகளை அரசு சரியாக நிர்வகிக்கத் தவறியால் இப்படியொரு நிலை எழுந்துள்ளது. மிகுந்த வேதனையுடன் எனது பட்ஜெட் மீதான உரையை எழுதி அளிக்கிறேன். இது ஒரு தவறான முன்மாதிரி என்று பாஜக உறுப்பினர் வெங்கய்ய நாயுடு கூறினார்.

உடனடியாக எழுதித் தர வேண்டுமென்றாலும் அதற்குக் கூட நேரமில்லை என்று சமாஜவாதி கட்சி உறுப்பினர்கள் கூறினர்.

எழுத்து மூலம் அளிக்கப்படும் தங்களின் உரைகளுக்கு மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் முழுமையாக பதில் அளிக்க வேண்டுமென்று உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இதனை ஏற்றுக் கொண்ட அமைச்சர் சிதம்பரம், உறுப்பினர்கள் எழுப்பிய முக்கிய விஷயங்களுக்கு பதில் அனுப்பி வைக்கப்படும் என்றார். இதைத் தவிர, பல்வேறு துறைகள் தொடர்பான கேள்விகள் உரிய அமைச்சகங்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.