முகப்பு
தினமணி கதிர்

அணிலாடும் முன்றில்

கிராமங்களில் ஒன்றைச் சொல்வதற்கு அதை நேரடியாகச் சொல்லாமல் மற்றொரு பொருளைச் சொல்லிப் பேசுவதை அதிகம் காணலாம்.

Updated On : 14 ஜூன் 2026, 5:29 pm IST
கோப்புப் படம்
பகிர்:

கிராமங்களில் ஒன்றைச் சொல்வதற்கு அதை நேரடியாகச் சொல்லாமல் மற்றொரு பொருளைச் சொல்லிப் பேசுவதை அதிகம் காணலாம். பெண் எப்படி இருக்கிறாள்? என்று கேட்கும் போது "கிளி போல இருக்கா' என்பார்கள். அழகாக இருக்கிறாள் என்று நாம் புரிந்து கொள்கிறோம். இப்படிப் பாமர மக்களின் மொழியிலும் அணியும் உவமையும் புழங்குகின்றன.

சங்க இலக்கியங்களில் இந்த உவமைகள் சற்று கூடுதல் அழகுடன் அமைந்திருப்பது அதன் சுவைக்கான காரணங்களுள் முதன்மையானது. பாடலின் பொருளைவிட உவமையின் சுவை விஞ்சி நிற்பதும் உண்டு.

சங்க இலக்கியங்களில் சில புலவர்களின் பெயர்கள் நமக்குத் தெரியவில்லை. அவர்களை என்ன பெயர் சொல்லி அழைப்பது? அவர்கள் பாடலின் பொருளோ கருத்தோ அவர்களுக்கு அடையாளம் தரவில்லை. அவர்கள் பயன்படுத்திய உவமை அவர்களின் அடையாளமாக பெயராக அமைந்து விடுகிறது. குறுந்தொகையில் அழகான பாடல்களில் ஒன்று,

Advertisement

Advertisement

"காதலர் உழைய ராகப் பெரிதுவந்து

சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற

அத்த நண்ணிய அங்குடிச் சீறூர்

மக்கள் போகிய அணிலாடு முன்றிற்

புலம்பில் போலப் புல்லென்று

அலப்பென் தோழியவர் அகன்ற ஞான்றே.'

(குறுந்தொகை 41)

அதாவது, காதலன் அருகில் இருந்தால் திருவிழா நடக்கும் ஊரைப் போல மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். அவர்

என்னைப் பிரிந்து சென்றுவிட்டால் எப்படி இருக்கிறது தெரியுமா? அழகான சிறிய கிராமத்தில் மனிதர்கள் எவருமே இல்லாமல் போய்விட்டால் எப்படி இருக்கும்? எவருமே இல்லாத முற்றத்தில் அணில் மட்டும் விளையாடிக்கொண்டிருக்கும் தனிமையான வீட்டைப் போல எல்லாம் வெறுமையாகி விடுகிறது. பொலிவு இழந்துபோய் வருந்துவேன். இந்தப் பாடலில் "அணிலாடும் முன்றில்' என்ற உவமை நமக்கு மனதின் வெறுமையை முற்றாய் உணரச் செய்துவிடுகிறது. இந்தப் பாடலை எழுதியவர் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளவில்லை. அணிலாடு முன்றிலார் என்ற அடையாளத்தைத் தமிழ் அவருக்கு வழங்கியிருக்கிறது.

ஓர் அழகான கிராமம் அங்கே வேப்ப மரத்தடியில் சிறுவர்கள் விளையாடுகிறார்கள். அந்த வேப்ப மரத்தில் கூடு கட்டி வசிக்கும் பருந்து முட்டையிட்டிருக்கிறது.

அந்திநேரம் வந்து கொண்டிருக்கிறது. உழவர்களும், வீரர்களும் வீடு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். வீட்டில் விளக்கேற்றுகிறாள் மனைவி, ஆனால், நானோ இல்லம் திரும்ப முடியாமல் பொருள் தேட வந்திருக்கிறேன். நற்றிணையில் இந்தப் பாடல் கொண்டிருக்கும் உவமை புதுமையின் உச்சம்.

"ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடுஞ்சினைப்

பொரி அரை வேம்பின் புள்ளி நீழல்

கட்டளை அன்ன இட்டு அரங்கு இழைத்து

கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும்

வில் ஏர் உழவர் வெம் முனைச் சீறூர்ச்

சுரன் முதல் வந்த உரன் மாய் மாலை

உள்ளினென் அல்லெனோ யானே உள்ளிய

வினை முடித்தன்ன இனியோள்

மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே.'

(நற்றிணை 3)

வேப்ப மர நிழல், விளையாடும் சிறுவர்கள், முட்டை போட்ட பருந்து, வீடு திரும்பும் ஆண்கள், விளக்கு ஏற்றும் பெண் என எல்லாமும் சேர்ந்து அழகான காட்சியை நமக்குத் தருகின்றன. அதிலே அந்திமயங்கும் நேரம் காட்சியை இன்னும் நுட்பமானதாக்குகிறது. தொழில் நிமித்தம் பிரிந்து வந்த ஆண் கவலையுடன் தன் மனைவியை நினைக்கிறான்.

பெண்ணுக்கு எத்தனையோ உவமைகளை உலகம் முழுவதும் இலக்கியங்கள் சொல்லியிருக்கலாம். ஆனால், ஓர் உணர்வை ஒரு பெண்ணின் குணத்துக்கான உவமையாக வாய்த்த கவிஞரை எப்படிப் பாராட்டுவது? "வினை முடித்தன்ன இனியோள்' -அதாவது, விரும்பிய ஒரு வேலையை நல்லபடியாக முடித்தவுடன் ஒருவித மகிழ்ச்சி, ஆனந்த நிலை மனதில் தோன்றுமே அதைப் போன்றவள் என் மனையாள் என்கிறான்.

இதில் இரு செய்திகள் புலனாகின்றன, அந்த ஆணுக்குத் தனது பணியின் மீதுள்ள விருப்பமும், மனைவி மீதுள்ள அன்பும் புரிதலும். தமிழ் இனிமையுடைத்து என்பதற்கு இதனினும் சான்று வேண்டுமோ!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.