முகப்பு
இந்தியா

தகவல் உரிமை சட்டத்தை மீறும் பிரதமர் அலுவலகம்!

பிரதமர் அலுவலகத்தில் கணினி மயமாக்கப்பட்ட, டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தகவல்கள், கோப்புகள் குறித்து தகவல்

Updated On : 2 ஏப்ரல், 2013 at 2:52 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:07 PM

பிரதமர் அலுவலகத்தில் கணினி மயமாக்கப்பட்ட, டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தகவல்கள், கோப்புகள் குறித்து தகவல் உரிமை சட்டத்தின் கீழ் விவரம் கேட்ட மனுதாரருக்கு அதனால் என்ன பயன் என்று பிரதமர் அலுவலகம் கேட்டுள்ளது.

தகவல் உரிமை சட்டம் 4-1-ஏ பிரிவின் கீழ் அனைத்து அரசு துறைகளும், குறிப்பிட்ட காலத்துக்குள் தங்களின் அனைத்து விவரங்களையும் முறையாக பட்டியலிட்டு, அட்டவணையிட்டு வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் அவற்றை நாடு முழுவதும் எளிதாகப் பயன்படுத்த முடியும் என்ற விதிமுறை உள்ளது.

இந்நிலையில், பிரதமர் அலுவலகத்தில் டிஜிட்டல்மயமாக்கப்பட்ட, கணினிமயமாக்கப்பட்ட கோப்புகள், தகவல்கள் குறித்து கடற்படையிலிருந்து ஓய்வுபெற்ற அதிகாரியான லோகேஷ் பாத்ரா விவரம் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

Advertisement

பிரதமர் அலுவலகத்தில் அவரது விண்ணப்பத்தை பரிசீலித்த முதன்மை தகவல் அதிகாரியான எஸ்.இ.ரிஸ்வி தகவல்களைத் தர மறுத்தார். பாத்ரா செய்த மேல்முறையீட்டைத் தொடர்ந்து தகவல் அளிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்ட பின்னர் அந்த அதிகாரி மீண்டும் தகவல்களை அளிக்க மறுத்துள்ளார்.

""இந்த தகவல்கள் விண்ணப்பதாரருக்கு தனிப்பட்ட முறையில் அல்லது பொது நன்மைக்கு அல்லது தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என எந்த வகையில் பயன்படும் என்று அவர் குறிப்பிடவில்லை. இந்த அடிப்படையில் அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது'' என்று முதன்மை தகவல் அதிகாரி காரணம் தெரிவித்திருக்கிறார்.

தகவல் கேட்டு விண்ணப்பித்தவருக்கு அந்த தகவல் எவ்வாறு பயன்படும் என்று கேட்க எந்த முதன்மை தகவல் அதிகாரிக்கும் அதிகாரமில்லை. விண்ணப்பதாரர் தலைமை தகவல் ஆணையத்தை அணுகினால் தகவல் அளிக்க மறுத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று முன்னாள் தலைமை தகவல் ஆணையர் ஏ.என்.திவாரி கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.