பெட்ரோல் விலை லிட்டருக்கு 85 காசு குறைப்பு
பெட்ரோல் விலை லிட்டருக்கு 85 காசு குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்பு திங்கள்கிழமை நள்ளிரவு முதல்
பெட்ரோல் விலை லிட்டருக்கு 85 காசு குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்பு திங்கள்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சரிந்ததைத் தொடர்ந்து இந்த விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விலைக்குறைப்பில் உள்ளூர் விற்பனை வரி மற்றும் வாட் வரி ஆகியவை சேர்க்கப்படவில்லை.
சென்னையைப் பொறுத்த வரை, வாட் வரியைச் சேர்த்த பின் பெட்ரோல் மீதான விலைக்குறைப்பு லிட்டருக்கு ரூ.1.08 ஆக இருக்கும். விலைக்குறைப்புக்குப் பின் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.70.34 ஆக இருக்கும்.
Advertisement
முன்னதாக, பெட்ரோல் விலையில் கடந்த மாதம் 16ஆம் தேதி லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டது. கடந்த 9 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான குறைப்பு இதுவாகும். மும்பை மற்றும் கொல்கத்தாவில் ரூ.1.07 குறைக்கப்பட்டு பெட்ரோல் விலை முறையே ரூ.74.14 மற்றும் ரூ.74.72 ஆகவும், தில்லியில் ரூ.1.02 குறைக்கப்பட்டு ரூ.67.29 ஆகவும் இருக்கும்.
இந்த விலைக் குறைப்பை அறிவித்துள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், சர்வதேச அளவில் பெட்ரோலின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 122.74 அமெரிக்க டாலரில் இருந்து 119.23 டாலராகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதன் பயனை நுகர்வோருக்கு கிடைக்கச் செய்யும் வகையில் விலைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 16ஆம் தேதிகளில் திருத்தி அறிவிக்கும். இப்போதைய விலைக்குறைப்பைப் பொறுத்தவரை மார்ச் 31ஆம் தேதியே அறிவிக்கப்படுவதாக இருந்தது.
எனினும் அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.