நிலக்கரிச் சுரங்க ஊழல்: "பொய்யான தகவலை கூறிய ஜிண்டால் குழுமம்'
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் நவீன் ஜிண்டால் குழுமம் உண்மைக்குப் புறம்பான தகவலை கூறியிருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் நவீன் ஜிண்டால் குழுமம் உண்மைக்குப் புறம்பான தகவலை கூறியிருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ 12ஆவது முறையாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
அமர்கொண்டா முர்கடங்கல் நிலக்கரிப் படுகையை ஜிண்டால் குழும நிறுவனங்களான ஜிண்டால் ஸ்டீல் அன்ட் பவர் மற்றும் ககன் ஸ்பாஞ்ச் அயர்ன் ஆகிய நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கு மின் துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனாலும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் நிலக்கரித் துறை இணையமைச்சர் தாசரி நாராயண ராவ் ஜிண்டால் குழுமத்துக்கு ஆதரவாக செயல்படுமாறு துறை செயலாளருக்கு குறிப்பு அனுப்பி உள்ளார்.
Advertisement
Advertisement
ஒதுக்கீடு பெறும் சுரங்கத்திலிருந்து பெறும் நிலக்கரியைப் பயன்படுத்துவது குறித்து உண்மைக்குப் புறம்பான தகவல்களை ஜிண்டால் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுவிஷயத்தில் ஜார்க்கண்ட் மாநில அரசும் ஜிண்டால் குழுமத்துக்கு சாதகமாக செயல்பட்டுள்ளது. 2007, ஜூன் 20ஆம் தேதியிட்ட கடிதத்தில் அமர்கொண்டா படுகையை லான்கோ இன்பிராடெக் (40%) மற்றும் ஜிண்டால் குழுமத்தின் 2 நிறுவனங்களுக்கும் (தலா 30%) ஒதுக்கீடு செய்வதாகக் குறிப்பிட்டுள்ளது. ஆனால் 2007, ஜூலை 30ஆம் தேதியிட்ட கடிதத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட ஜார்க்கண்ட் அரசு, ஜிண்டால் குழும நிறுவனங்களுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.