முகப்பு
இந்தியா

நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளர்: ராஜ்நாத் சிங் சூசகம்

குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்பதை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் சூசகமாக தெரிவித்துள்ளார். அதேநேரம் பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் தாம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Updated On : 21 ஜூலை, 2013 at 10:21 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:15 PM

குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்பதை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் சூசகமாக தெரிவித்துள்ளார். அதேநேரம் பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் தாம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

5 நாள் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்றுள்ள ராஜ்நாத் சிங், நியூயார்க் நகரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒரு கட்சியின் தலைவராக இருப்பவர், மக்கள் கூட்டத்தை ஈர்ப்பவராகவும், பிரதமர் வேட்பாளராகவும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. 2014 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற பணி எனக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்காக பாடுபடுவேன்.

தேர்தலுக்கு முன்னதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கட்சியின் தேர்தல் பிரசாரக் குழு தலைவராக நியமித்துள்ளேன். இதில் வழக்கத்துக்கு மாறாக என்ன இருக்கிறது? மற்ற கட்சிகள் என்ன செய்கிறதோ அதைத்தான் நானும் செய்துள்ளேன்.

Advertisement

நாடு முழுவதும் உள்ள புகழ், கட்சிக்காக பாடுபட வேண்டும் என்ற பொறுப்பு ஆகியவற்றின் அடிப்படையில்தான் மோடியை பிரசாரக் குழுவாக தெர்ந்தெடுத்துள்ளோம். இதில் உள் அர்த்தத்தை ஏன் தேட வேண்டும்?

குஜராத்தில் மட்டுமல்லாது வடக்கிலிருந்து தெற்கு வரை, கிழக்கிலிருந்து மேற்கு வரை மக்கள் மத்தியில் மோடி பிரபலமாக விளங்குகிறார். நாடு முழுவதும் பிரபலமாக உள்ள ஒரே தலைவர் மோடிதான். இவரது புகழ் மூலம் வரும் மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும்.

பிரதமராகும் எண்ணம் எனக்கு இல்லை. நான் பாஜக தலைவராக இருக்கும்போதே ஊழல் மலிந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பதுதான் என் நோக்கம்.

தேர்தல் பிரசாரத்தின்போது ராமர் கோவில் விவகாரம் முக்கிய பிரச்னையாக முன்வைக்கப்பட மாட்டாது. அது ஒரு தேசிய பிரச்னையே தவிர, தேர்தல் பிரச்னை அல்ல.

பாஜக ஆளும் குஜராத், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் 24 மணி நேர தடையில்லா மின்சாரமும், சிறப்பான நிர்வாகமும் நடைபெறுகிறது. ஆனால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் மக்கள் எந்த ஆட்சியை விரும்புவார்கள்?

கடந்த கால தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் நிர்வாகத்துடன் இப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் செயல்பாடுகளை மக்கள் ஒப்பிட்டுப் பார்த்து உண்மை நிலையைப் புரிந்து கொண்டுள்ளனர். பாஜக தலைமையிலான அரசுதான் தீர்வு என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குரியதாகி உள்ளது. பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக சரிந்துள்ளது. ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களில் 10 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. இனிமேலும் மக்களை ஏமாற்ற முடியாது.

காங்கிரஸ் கட்சியின் மோசமான நிர்வாகம் காரணமாக அடுத்த தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வரும் என உறுதியாக நம்புகிறோம். பாஜக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் தேர்தலுக்கு முன்னதாகவும், தேர்தலுக்கு பின்னரும் சேரும் என்றார் ராஜ்நாத் சிங்.

மோடி மீதான தடையை நீக்க கோரிக்கை: மோடிக்கு எதிரான தடையை நீக்குமாறும், அவருக்கு விசா வழங்குமாறும் அமெரிக்க அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்த கலவரத்தையடுத்து, அங்கு மனித உரிமை மீறப்பட்டதாகக் கருதி மோடிக்கு விசா வழங்குவதில்லை என அமெரிக்க அரசு முடிவு எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.