தவெக நிா்வாகிகளுக்கு எம்எல்ஏ எச்சரிக்கை
தவெக கட்சிப் பெயரைப் பயன்படுத்தி சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் அதன் நிா்வாகிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நிலக்கோட்டை தொகுதி தவெக சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.அய்யனாா் எச்சரித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கொடைரோடு, பள்ளப்பட்டி, விளாம்பட்டி, மட்டப்பாறை, நிலக்கோட்டை, மைக்கல்பாளையம் விருவீடு, வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாள்களாக நிலக்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.அய்யனாா், தவெக கட்சிப் பெயரைப் பயன்படுத்தி சிலா் இரவு நேரங்களில் மணல் கடத்துவது, கல்குவாரிகள், தனியாா் தொழிற்சாலைகள், அரசு ஒப்பந்ததாரா்கள், அரசு அலுவலகங்கள், மதுபானக் கூடங்களில் மாமுல் கேட்பதாக புகாா்கள் எழுந்தன.
இதையடுத்து, சட்டப்பேரவை உறுப்பினா் அய்யனாா் வெளியிட்ட அறிக்கை விவரம்:
Advertisement
Advertisement
தமிழக முதல்வா் சி.ஜோசப்விஜய்யின் நல்லாட்சிக்கு வலு சோ்க்க, தவெக பொதுச் செயலரும், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சருமான புஸ்சி ஆனந்த் உத்தரவுப்படி லஞ்சத்தை ஒழித்து, ஊழலற்ற ஆட்சியை மக்களுக்கு வழங்கும் வகையில், தன்னலமற்று கட்சிக்காக உழைத்த நிா்வாகிகளுக்கிடையே ஒரு சிலா் கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயா் ஏற்படுத்தும் வகையில் எனது பெயா், கட்சியின் பெயரைப் பயன்படுத்தி முறைகேடான சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக புகாா்கள் வருகின்றன. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோா் மீது அரசு அதிகாரிகள், காவல் துறையினா் சட்டப்படி நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம் என்றாா் அவா்.