மத்திய அரசுக்கு எதிராக 17 எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக 17 கட்சிகள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை ஒன்றுசேர்ந்து மனிதச் சங்கிலி ஆர்ப்பாட்டம் நடத்தின.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக 17 கட்சிகள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை ஒன்றுசேர்ந்து மனிதச் சங்கிலி ஆர்ப்பாட்டம் நடத்தின.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திரிணமூல் காங்கிரஸ், திமுக, இடதுசாரி, சமாஜவாதி, பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம் உள்பட 17 கட்சிகளின் எம்பிக்களும் பங்கேற்றதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆஸாத் தெரிவித்தார்.
காந்தி சிலை முன்பு சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த ஆர்ப்பாட்டத்தில் வங்கி முறைகேடு, தலித்துகளுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள், ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளை அந்தந்த மாநில எம்பிக்கள் எழுப்பினர்.
'தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப தாங்கள் முற்படுவதாகவும், ஆனால் மத்திய அரசு நாடாளுமன்றத்தை செயல்பட அனுமதிப்பதில்லை' என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக உறுப்பினர்கள் திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ். பாரதி, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா ஆகியோர் பங்கேற்றனர். கருப்பு சட்டை அணிந்திருந்து திமுக உறுப்பினர்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்த போது மற்றொரு பகுதியில் காவிரி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற அதிமுக உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் குலாம் நபி ஆஸாத் கூறுகையில், 'காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து, வங்கி முறைகேடு, தலித் பாதுகாப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்தல் உள்ளிட்ட விவகாரங்களை அவையில் எழுப்ப எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. ஆனால், எந்த விவகாரம் குறித்தும் அவையில் விவாதிக்க மத்திய அரசு விரும்பவில்லை. இதனால்தான் 17 கட்சிகள் காந்தி சிலை முன் கூடி மனிதச் சங்கிலி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம்' என்றார்.
மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா கூறுகையில், 'காவிரி மேலாண்மை வாரியம் உள்பட பல்வேறு பிரச்னைகளை முன்னிறுத்தி அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இப்போராட்டம் நடைபெற்றது. காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிந்த பிறகும் போராட்டம் தொடரும்' என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா கூறுகையில், 'நாடாளுமன்றம் முடங்கியிருப்பதற்கு எதிர்க்கட்சிகள் மீது அரசு பழிபோடுகிறது. ஆனால், முக்கிய விவாதங்களை மேற்கொள்ள அரசு முன்வரவில்லை. நாடாளுமன்றம் முடங்கியிருப்பதற்கு அரசுதான் காரணம்' என்றார்.
காங்கிரஸ், திமுக மீது அதிமுக புகார்
ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் டாக்டர் பி.வேணுகோபால் கூறுகையில், 'காவிரி விவகாரத்தை 1974-இல் தீர்க்க அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுக தவறியது. 2007-இல் நடுவர் மன்றத் தீர்ப்பு வந்த பிறகும் அதைச் செயல்படுத்த மத்தியில் காங்கிரஸ் அரசில் அங்கம் வகித்த திமுக தவறியது. தற்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் 6 வாரங்கள் அவகாசம் கொடுத்த நிலையிலும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸுக்கு சோனியா காந்தியின் மூலம் அழுத்தம் கொடுக்க திமுக தவறியது. மேலும், தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்களும் தவறிவிட்டனர். இந்நிலையில், தற்போது நாடாளுமன்ற வளாகத்தில் காவிரி விவகாரத்திற்காக மனிதச் சங்கிலி நடத்துவதாகக் கூறி காங்கிரஸும், திமுகவும் நாடகமாடுகின்றன' என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.