அயோத்தி வழக்கில் விரைந்து விசாரணை நடத்த வேண்டும்: ரவி சங்கர் பிரசாத் வேண்டுகோள்
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் விரைந்து விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் விரைந்து விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சபரிமலை பிரச்னையில் தீர்வு தேடித் தந்த உச்சநீதிமன்றம், அயோத்தி பிரச்னைக்கும் உரிய தீர்வை அளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெளவில் அனைத்திந்திய வழக்குரைஞர்கள் சபை சார்பில் நடத்தப்பட்ட தேசிய மாநாட்டைச் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்து ரவி சங்கர் பிரசாத் பேசியதாவது:
ராம ஜென்ம பூமி தொடர்பான வழக்கை விரைந்து விசாரித்து, அந்தப் பிரச்னையை முடித்து வைக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தைத் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொள்கிறேன். சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபடுவது தொடர்பான வழக்கில் விரைந்து தீர்ப்பளித்த நீதிமன்றம், கடந்த 70 ஆண்டுகளாக சர்ச்சைக்குரிய பிரச்னையாக இருக்கும் அயோத்தி வழக்கில் மட்டும் ஏன் விரைந்து தீர்ப்பு அளிக்க முடியாது?
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ராமர், கிருஷ்ணர், அக்பர் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பாபர் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. அப்படியிருக்கையில், பாபரை நாம் ஏன் வழிபட வேண்டும்? இதுகுறித்து பேசினால், தேவையில்லாத சர்ச்சைகளே கிளம்பும்.
எதிர்காலத்தில் நீதிபதிகளைத் தேர்வு செய்வதற்கு, அனைத்திந்திய நீதித்துறை சேவைகள் அமைப்பு முறை கொண்டு வரப்படும். ஏழை மற்றும் உதவி தேவைப்படுவோரின் வழக்குகள் திறம்படவும், துரிதமாகவும் விசாரிக்கப்படுவதை இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள வழக்குரைஞர்கள் உறுதி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார்.
இந்த நிகழ்ச்சியில், உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா, அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கோவிந்த் மாத்தூர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அயோத்தி விவகாரம் தொடர்பாக அலாகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள், உச்சநீதிமன்றத்தில் வரும் ஜனவரி மாதம் 4-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. அப்போது, 14 மனுக்களையும் விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை உச்சநீதிமன்றம் ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.