அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டிப்பு!
சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைப் பற்றி...
திமுக முன்னாள் அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீட்டித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னாள் அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த 2001 முதல் 2006 வரை அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.7 கோடி சொத்து சோ்த்ததாக அவா் மீது ஊழல் ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் அவரது குடும்பத்தினா் பெயரும் சோ்க்கப்பட்டது. இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கின் அடிப்படையில் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக கடந்த 2025-ஆம் ஆண்டு சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள வழக்கை மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி அமலாக்கத் துறை சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், தூத்துக்குடி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில், தூத்துக்குடி நீதிமன்ற விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு, அமலாக்கத் துறை, ஊழல் ஒழிப்புத் துறை 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா். மேலும், தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து உத்தரவிட்டனா்.
The Madras High Court has ordered the extension of the interim stay on the trial of the disproportionate assets case pending against former Minister Anita Radhakrishnan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.