4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருப்பது பற்றி...
சென்னை: மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரும் அதிமுகவின் கோரிக்கையை ஏற்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், ராஜிநாமா செய்த 4 எம்எல்ஏக்கள், சட்டப்பேரவைத் தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவில், மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமாரவேல், பெருந்துறை தொகுதி எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் தொகுதி எம்எல்ஏ சத்தியபாமா, அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆகிய நால்வரும், எம்எல்ஏ பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு, தவெகவில் இணைவது குறித்து ஏற்கெனவே அக்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
நால்வரும் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜிநாமா செய்த உடனே தவெகவில் இணைந்துள்ளனர். எனவே, இது திடீரென எடுத்த முடிவு அல்ல. இந்த விவகாரத்தில் அரசியல் சட்டவிதிகள் மீறப்பட்டுள்ளன. தகுதிநீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்தபோது பேரவைத் தலைவர் இந்த நால்வரின் ராஜிநாமா கடிதங்களை ஏற்றுக் கொண்டுள்ளார். எனவே, நால்வரின் ராஜிநாமாவை ஏற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இந்த நான்கு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
Advertisement
Advertisement
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரிய இடைக்கால கோரிக்கையை மறுத்து விட்டனர். மேலும், இந்த மனுவுக்கு பதவியை ராஜிநாமா செய்த 4 எம்எல்ஏக்களும், சட்டப்பேரவைத் தலைவரும் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Chennai High Court refuses to stay by-elections in 4 constituencies
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.