ஐஎன்எஸ் அரிஹந்த் நீர் மூழ்கி கப்பலின் கண்காணிப்பு இயக்கம் வெற்றி: பிரதமர் பாராட்டு
அணு ஆற்றலில் இயங்க வல்ல ஐஎன்எஸ் அரிஹந்த் நீர் மூழ்கிக் கப்பலின் முதல் கண்காணிப்பு இயக்கம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக பிரதமர் மோடி
அணு ஆற்றலில் இயங்க வல்ல ஐஎன்எஸ் அரிஹந்த் நீர் மூழ்கிக் கப்பலின் முதல் கண்காணிப்பு இயக்கம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் இந்த சாதனை, அணு ஆயுதங்களை வைத்து மிரட்டல் விடுக்கும் நாடுகளுக்கு தக்க பதிலடியாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
முழுக்க, முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கிக் கப்பல், மொத்தம் 6 ஆயிரம் டன் எடை கொண்டது. யுரேனியத்தை எரிபொருளாகக் கொண்டு இயங்கக் கூடிய அக்கப்பலில் மொத்தம் 4 ஏவுதளங்கள் உள்ளன. அதன் வாயிலாக ஒரே நேரத்தில் 12 சிறிய ரக ஏவுகணைகளையோ அல்லது 3,500 கிலோ மீட்டர் தொலைவு வரை சென்று தாக்கும் 4 பெரிய ஏவுகணைகளையோ செலுத்த முடியும்.
அணு ஆற்றலில் இயங்கக் கூடிய நீர்மூழ்கிக் கப்பலானது குறிப்பிட்ட வல்லரசு நாடுகளிடம் மட்டுமே உள்ளது. தற்போது இந்தியாவும் அந்த வகை கப்பலை கொண்டிருப்பது நாட்டின் படை வலிமையை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது.
அண்மையில் ஐஎன்எஸ் அரிஹந்த் கப்பலில் இருந்து ஏவுகணைகள் வெற்றிகரமாக செலுத்தி சோதிக்கப்பட்டன. எதிரி நாட்டு ஆயுதங்கள், கப்பல்கள் இந்திய கடற்பிராந்தியத்தில் உள்ளனவா என்பதைக் கண்காணிப்பதற்கான ரோந்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. மேலும், அக்கப்பலின் முழு திறனும் பரிசோதிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த நடவடிக்கைகளைப் பாராட்டி பிரதமர் மோடி சுட்டுரையில் சில கருத்துகளை திங்கள்கிழமை பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
தேசத்தின் பெருமைகளில் ஒன்றாக இணைந்திருக்கும் ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கிக் கப்பல், தனது முதலாவது கண்காணிப்பு இயக்கத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதற்காக உழைத்த அனைவருக்கும் பாராட்டுகள். குறிப்பாக அக்கப்பலை இயக்கிய குழுவினருக்கு வாழ்த்துகள். இந்திய வரலாற்றில் இந்த நிகழ்வு என்றென்றைக்கும் நினைவுகூரப்படும்.
பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும், எதிரிகளிடம் இருந்து விடுக்கப்படும் அச்சுறுத்தல்களில் இருந்து நாட்டை பாதுகாக்கவும் ஐஎன்எஸ் அரிஹந்த் கப்பல் உற்ற துணையாக இருக்கும் என்று அதில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் ஆகியோருக்கும் இதற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.