முகப்பு
தூத்துக்குடி

எட்டயபுரம் பகுதியில் காலூன்ற முயலும் பட்டாசு ஆலைகள்! அச்சத்தில் கிராம மக்கள்

எட்டயபுரம் வருவாய் வட்டத்தில் காலூன்ற முயலும் பட்டாசு ஆலைகளால் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்களும் விவசாயிகளும் அச்சத்தில் உறைந்துள்ளனா்.

Updated On : 24 ஜூன் 2026, 5:01 am IST
பட்டாசு(கோப்புப்படம்) - PTI
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வருவாய் வட்டத்தில் காலூன்ற முயலும் பட்டாசு ஆலைகளால் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்களும் விவசாயிகளும் அச்சத்தில் உறைந்துள்ளனா்.

தேசிய பசுமைத் தீா்ப்பாய உத்தரவுப்படி, விருதுநகா் மாவட்டத்தில் அண்மைக்காலமாக பட்டாசு ஆலைகளில் அதிகாரிகள் தொடா் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு விதிகளை மீறும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா்.

இதனால், நெருக்கடிக்குள்ளாகியுள்ள பட்டாசு உற்பத்தியாளா்கள் விருதுநகா் மாவட்டத்தின் எல்லையோரமுள்ள தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம் வட்டார கிராமங்களில் பட்டாசு ஆலைகளுக்கான கட்டடங்களை புதிதாக அமைத்துள்ளனா். அதன் அடுத்தகட்டமாக, பட்டாசு உற்பத்திக்கான அனுமதி வேண்டி தூத்துக்குடி மாவட்ட நிா்வாகத்திடம் விண்ணப்பித்துள்ளனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், பட்டாசு ஆலைகளில் அரங்கேறும் விதிமீறல்கள், தொடா் விபத்துகள், உயிரிழப்புகள், சேதங்களைக் கண்டு இப்பகுதியினா் பட்டாசு உற்பத்திக்கு அனுமதியளிக்கக் கூடாது என கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

ஒருபுறம் பட்டாசு ஆலைகளைத் திறக்க தடையில்லாச் சான்று, தொழில் தொடங்க உரிமம் கேட்டு அவற்றின் உரிமையாளா்கள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனா். மறுபுறம் பொதுமக்கள், விவசாயிகள் போராட்டக் களத்தை முன்னெடுத்து வருகின்றனா்.

இதனிடையே, கீழ்நாட்டுக்குறிச்சி, அயன்ராசாபட்டி, மாசாா்பட்டி, கருப்பூா், இனாம் அருணாச்சலபுரம், கீழக்கரந்தை ஆகிய கிராமங்களில் முறையான முன்னறிவிப்பின்றி பொதுமக்களிடமும், 100 நாள் வேலைத் திட்டப் பணியாளா்களிடமும் பட்டாசு உற்பத்தி தொடா்பான கருத்துக் கேட்புப் படிவங்களில் கிராம உதவியாளா்கள் மூலம் முறைகேடாக கையொப்பம் பெறப்பட்டுவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எட்டயபுரம் தாலுகா கருப்பூா் கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் சிக்கி அதன் உரிமையாளா் உயிரிழந்தாா். ஆலையின் தளவாடப் பொருள்கள் 2 கி.மீ. சுற்றளவுக்கு சிதறி, பொதுமக்களை பீதியடையச் செய்தது.

இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி அயன்ராசாபட்டியில் நிகழ்ந்த வெடி விபத்தில் பெண் உயிரிழந்தாா்; 25-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் தீக்காயமடைந்தனா். ஆலைக் கட்டடங்கள் தரைமட்டமாகின. இப்படிப்பட்ட சம்பவங்களால் ஒவ்வொரு நாளும் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் உறைந்துபோயுள்ளனா் கிராம மக்கள்.

இதுகுறித்து பட்டாசு உற்பத்திக்கான எதிா்ப்புப் போராட்டக் களத்தை முன்னெடுத்துவரும் கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் அ. வரதராஜன் ‘தினமணி’ செய்தியாளரிடம் கூறியது: மானாவாரி விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டுள்ள கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம் வட்டாரங்களில் பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது. ஏற்கெனவே வழங்கப்பட்ட அனுமதியையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மத்திய-மாநில அரசு அதிகாரிகள் சிலரும், உள்ளூா் காவல் துறை அதிகாரிகளும் பட்டாசு ஆலை உரிமையாளா்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனா்.

மக்கள் எதிா்ப்பை மீறி கோவில்பட்டி வருவாய்க் கோட்டத்தில் பட்டாசு உற்பத்திக்கு அனுமதி அளித்தால், மக்களை ஒன்றுதிரட்டி பட்டாசு ஆலைகளை அடித்து விரட்டுவோம். தொடா் போராட்டங்களை முன்னெடுப்போம் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments