ரஃபேல் விமானத்தின் விலை: காங்கிரஸுக்கு பாஜக சவால்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 2-ஆவது ஐந்தாண்டு கால ஆட்சியில் (2009-14), ரஃபேல் போர் விமானத்துக்கு எவ்வளவு விலை பேசப்பட்டது என்ற
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 2-ஆவது ஐந்தாண்டு கால ஆட்சியில் (2009-14), ரஃபேல் போர் விமானத்துக்கு எவ்வளவு விலை பேசப்பட்டது என்ற விவரத்தை வெளியிட தயாரா? என்று காங்கிரஸுக்கு பாஜக சவால் விடுத்துள்ளது.
இந்திய விமானப் படைக்கு பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு, காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அதுதொடர்பான ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை.
மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், 34 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும்; ரஃபேல் போர் விமானங்களுக்கு அதிக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. ரஃபேல் போர் விமான உதிரி பாகங்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதிலும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அக்கட்சி குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
அதிநவீன போர் விமானங்களின் தேவை குறித்து இந்திய விமானப் படை தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்த போதிலும், கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை ரஃபேல் ஒப்பந்தத்தை அப்போதைய காங்கிரஸ் அரசு இறுதி செய்யவில்லை. இந்த விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட ராபர்ட் வதேராவின் உதவியாளருக்குதான், காங்கிரஸ் அரசு முக்கியத்துவம் அளித்தது. இந்திய விமானப் படையின் தேவை குறித்து அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஐந்தாண்டு ஆண்டுகால ஆட்சியில் (2006-09) பேசப்பட்ட ரஃபேல் விமானத்தின் விலையை மட்டுமே காங்கிரஸ் தற்போது கூறி வருகிறது. 2012-13ஆம் ஆண்டில் ரஃபேல் விமானத்துக்கு எவ்வளவு விலை பேசப்பட்டது என்பதை கூற காங்கிரஸ் தயாரா? அப்போது பேசப்பட்ட விலையைவிட தற்போதைய ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட விலை குறைவானதுதான்.
தற்போதைய ரஃபேல் ஒப்பந்தத்தில், ராபர்ட் வதேராவுக்கு நெருக்கமான இடைத்தரகர் தூக்கியெறியப்பட்டுவிட்டார். இதனால், காங்கிரஸ் கட்சி வேதனையில் உள்ளது. எனவேதான், ரஃபேல் ஒப்பந்தம் குறித்து தொடர்ந்து பொய்களை கூறி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகு, காங்கிரஸின் உண்மை முகம் அம்பலமாகும் என்றார் அர்ஜுன் ராம் மேக்வால்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.