முகப்பு
இந்தியா

வளைகுடா நாடுகளில் நாளொன்றுக்கு 10 இந்தியர்கள் இறப்பு: ஆர்டிஐ மூலம் வெளிவந்த தகவல்

கடந்த 6 ஆண்டுகளாக வளைகுடா நாடுகளில் நாளொன்றுக்கு 10 இந்தியர்கள் உயிரிழந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

Updated On : 6 நவம்பர் 2018, 1:00 am IST
பகிர்:


கடந்த 6 ஆண்டுகளாக வளைகுடா நாடுகளில் நாளொன்றுக்கு 10 இந்தியர்கள் உயிரிழந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
பஹ்ரைன், ஓமன், கத்தார், குவைத், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய வளைகுடா நாடுகளில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களைப் பற்றிய விவரங்களைக் கேட்டு, வெங்கடேஷ் நாயக் என்ற சமூக ஆர்வலர், வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார். அதில், கடந்த 2012 ஜனவரி முதல் 2018 பிற்பகுதி வரை, வளைகுடா நாடுகளில் உயிரிழந்த இந்தியர்களின் விவரங்களை அளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
அந்த விவரங்களை, பஹ்ரைன், ஓமன், கத்தார், சவூதி அரேபியா நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களிடம் இருந்து வெளியுறவுத் துறை அமைச்சகம் பெற்றுள்ளது. அதேவேளையில், ஐக்கிய அரபு அமீரகம், குவைத் ஆகிய நாடுகள் தகவல்களை அளிக்க மறுத்து விட்டன. ஐக்கிய அரபு அமீரகம், கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து விவரங்களை வைத்திருப்பதாகக் கூறியுள்ளது. 
இருப்பினும், இதுதொடர்பான கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளித்த விளக்கத்தைக் கொண்டு அந்த விவரங்களை வெங்கடேஷ் நாயக் சேகரித்திருக்கிறார். இதுதொடர்பாக, அவர் கூறியதாவது:
வளைகுடா நாடுகளில் கடந்த 6 ஆண்டுகளில் 24,570 இந்தியத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை தகவல்களை அளித்தால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. அதன்படி, வளைகுடா நாடுகளில் நாளொன்றுக்கு சராசரியாக 10 இந்தியத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 2012 முதல் 2017 வரை, இந்தியர்களின் உழைப்பால் ஒட்டுமொத்தமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு 41,033 கோடி டாலர் வருவாயாகக் கிடைத்தது. அதில், வளைகுடா நாடுகளில் இருந்து மட்டும் 20,907 கோடி டாலர் கிடைத்துள்ளது. அதில், ஒவ்வொரு 100 கோடி டாலர் வருவாயைப் பெறும்போது, 117 இந்தியர்களை இழந்துள்ளோம். 
இந்த ஒப்பீடு மூலம், வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் மரணத்தால் இந்தியாவுக்கு வருவாய் கிடைக்கிறது என்று கருதிவிடக் கூடாது. பணம் சம்பாதிப்பதற்காக, வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் அதிக அளவில் உயிரிழக்கிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவலை வெளியுலகுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக, அவர்களின் வருவாய்க்கும், மரணத்துக்கும் இடையே உள்ள விகிதம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments