முகப்பு
இந்தியா

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கு: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை வெளியிடுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி புதிதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுக்களை

Updated On : 9 அக்டோபர் 2018, 1:29 am IST
பகிர்:


ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை வெளியிடுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி புதிதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுக்களை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை விசாரிக்கவுள்ளது.
ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவரங்களை வெளியிடுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வினீத் தண்டா என்ற வழக்குரைஞர், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போதும், தற்போதைய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போதும் முடிவு செய்யப்பட்ட விலை விவரங்களை மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 
மேலும், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்ட விவரங்களை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். 
அவரது மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கெளல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை பரிசீலனைக்கு வந்தது. அந்த மனுவை, புதன்கிழமை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதேபோல், ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்துக்கு தடை விதிக்கக் கோரி மூத்த வழக்குரைஞர் எம்.எல்.சர்மா தாக்கல் செய்துள்ள மனுவும் உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வருகிறது. 
அந்த மனுவில், இரு நாட்டு அரசுகளுக்கு இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்போது, நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டியது அவசியம். ஆனால், நாடாளுமன்ற ஒப்புதலின்றி மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதால், அதை ரத்து செய்ய வேண்டும் என்று எம்.எல்.சர்மா குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், காங்கிரஸ் தலைவர் தெஷீன் பூனாவாலாவும், உச்ச நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்; அந்த ஒப்பந்த விலை விவரங்களை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, பிரான்ஸிடம் இருந்து 126 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டது. அதில், 18 விமானங்களை பறக்கும் நிலையில் இந்தியாவுக்கு வழங்குவது என்றும், எஞ்சிய 108 விமானங்களை பிரான்ஸின் தொழில்நுட்ப உதவியுடன் இந்தியாவில் தயாரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், ஒப்பந்தம் இறுதிசெய்யப்படவில்லை.
அதன் பிறகு, ஆட்சிக்கு வந்த மத்திய பாஜக கூட்டணி அரசு, பிரான்ஸிடம் இருந்து பறக்கும் நிலையில் 36 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு கடந்த 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. மேலும், போர் விமானங்களின் உதிரி பாகங்களைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தம், ரிலையன்ஸ் குழும நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இதில், பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.