முகப்பு
இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் என்கவுன்ட்டர் கொலைகள்: மனுவை பரிசீலிக்க உச்சநீதிமன்றம் முடிவு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் போலீஸார் என்கவுன்ட்டர்கள் மூலம் தொடர்ந்து பலர் கொலை செய்யப்படுவது குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும்

Updated On : 15 ஜனவரி 2019, 12:44 am IST
பகிர்:


உத்தரப் பிரதேச மாநிலத்தில் போலீஸார் என்கவுன்ட்டர்கள் மூலம் தொடர்ந்து பலர் கொலை செய்யப்படுவது குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிப்பதாக உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற பிறகு போலீஸார் என்கவுன்ட்டர்கள் மூலம் பலரை சுட்டுக் கொல்வது அதிகரித்துள்ளதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாநிலத்தில் சமூகவிரோதிகளையும், ரெளடிகளையும் ஒழிக்கும் வகையில் மாநில அரசின் உத்தரவின் பேரில்தான் போலீஸார் இந்த என்கவுன்ட்டர்களை திட்டமிட்டு நடத்துகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
கடந்த 2017 ஜனவரி 1 முதல் 2018 மார்ச் 31-ஆம் தேதிவரை உத்தரப் பிரதேசத்தில் என்கவுன்ட்டர் மூலம் 45 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மாநில அரசு சார்பில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 2017-ஆம் ஆண்டில் மட்டும் 1,100 என்கவுன்ட்டர்கள் நிகழ்த்தப்பட்டதாகவும், இதில் 49 பேர் கொல்லப்பட்டனர், 370 பேர் காயமடைந்தனர் என்று உச்சநீதிமன்றத்தில் தொண்டு நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், சமூக விடுதலைக்கான மக்கள் கூட்டமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உத்தரப் பிரதேசத்தில் நிகழ்த்தப்பட்ட என்கவுன்ட்டர்கள் குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ அல்லது சிறப்பு விசாரணை அமைப்பு (எஸ்ஐடி) மூலம் விசாரணை நடத்த வேண்டும். உத்தரப் பிரதேச மாநில அரசில் பணியாற்றும் எவரும் விசாரணைக் குழுவில் இடம் பெறக் கூடாது என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.கே.கெளல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, உத்தரப் பிரதேச அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி, இந்த விஷயத்தில் மாநில அரசு அனைத்து விதிகள் மற்றும் நடைமுறையை கடைப்பிடித்துள்ளது என்றார்.
எனினும், இந்த என்கவுன்ட்டர் விவகாரம் மிகவும் கவலையளிக்கும் பிரச்னை என்று கருத்துத் தெரிவித்த நீதிபதிகள் மனுவை பரிசீலனைக்கு ஏற்பதாகவும், மனு மீதான அடுத்தகட்ட விசாரணை பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments