முகப்பு
இந்தியா

காஷ்மீரில் பயங்கரவாதத்தை கைவிடும் இளைஞர்களுக்கு மறுவாழ்வு: ஆளுநர் சத்யபால் மாலிக் உறுதி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதத்தை கைவிடும் இளைஞர்களின் மறுவாழ்வுக்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக

Updated On : 15 ஜனவரி 2019, 1:23 am IST
பகிர்:


ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதத்தை கைவிடும் இளைஞர்களின் மறுவாழ்வுக்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக அந்த மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் உறுதியளித்துள்ளார்.
காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழிப்பது என்பது பயங்கரவாதிகளை சுட்டுக் கொல்வது என்பதல்ல; தவறான பாதையில் சென்றவர்களை நேர் வழிக்கு அழைத்து வருவதும்தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜம்முவில் திங்கள்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடும்போதும், வெடிகுண்டுகளை வீசும்போதும் நாம் அவர்களை ஆயுதங்கள் மூலம்தான் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதே நேரத்தில் பயங்கரவாதத்தை கைவிட்டு, ஆயுதங்களை தூர வீசிவிட்டு வருபவர்களை மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்க மாநில நிர்வாகம் தயாராக உள்ளது. மாநிலத்தில் பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் துப்பாக்கி ஏந்துபவர்களை துப்பாக்கியால் எதிர்கொள்வதுடன் மட்டும் முடிவதில்லை. தவறான பாதையைத் தேர்வு செய்தவர்களுக்கு நேர் வழி காட்டுவது அதில் முக்கியமானது.
பயங்கரவாத அமைப்புகளில் சேரும் இளைஞர்கள் தங்கள் பெற்றோர் உடன் பிறந்தோர் அன்புக்குரியவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும். 
இந்த அழகான மாநிலம் அவர்கள் அனைவரும் இணைந்து அமைதியாக வாழ்வதற்காகதானே தவிர, மண்ணை ரத்தத்தால் நனைப்பதற்காக அல்ல என்றார்.
ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சி அமைத்தால் காஷ்மீரில் நடைபெறும் கொலைகள் (பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகள்) குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அக்கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளது தொடர்பாக சத்யபால் மாலிக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அவர் மூத்த அரசியல் தலைவர். அவரது கருத்தை நான் விமர்சிப்பது நன்றாக இருக்காது என்றார்.
ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி தொடர்ந்து அரசியல் கட்சிகளின் விமர்சனங்களுக்கு உள்ளாவது குறித்த கேள்விக்கு, அரசியல்வாதிகள் சில கருத்துகளை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் என்ற நிலை இங்கு உள்ளது. 
நமது நாட்டில் வாக்குக்காக அரசியல்வாதிகள் எந்த நிலைக்கும் செல்வார் என்ற நிலையே உள்ளது. ஒவ்வொருவரது அரசியல் கட்டாயங்கள் என்ன என்பது எனக்குத் தெரியும். அவர்களை நான் மதிக்கிறேன். தேர்தல் ஆணையம் முடிவு செய்து அறிவிக்கும் தேதியில் ஜம்மு-காஷ்மீரில் சட்டப் பேரவைத் தேர்தலை நடத்த மாநில நிர்வாகம் தயாராக இருக்கிறது என்றார் சத்யபால் மாலிக்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments