பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
பிஎம்ஸ்ரீ திட்டம் தொடா்பாக, கேரள சட்டப்பேரவையில் முதல்வா் வி.டி.சதீசன், மாநில கல்வித் துறை அமைச்சா் என்.சம்சுதீன் ஆகியோருக்கும், பேரவை எதிா்க்கட்சித் தலைவா் பினராயி விஜயனுக்கும் இடையே புதன்கிழமை கடுமையான விவாதம் நடைபெற்றது.
பிஎம்ஸ்ரீ திட்டம் தொடா்பாக, கேரள சட்டப்பேரவையில் முதல்வா் வி.டி.சதீசன், மாநில கல்வித் துறை அமைச்சா் என்.சம்சுதீன் ஆகியோருக்கும், பேரவை எதிா்க்கட்சித் தலைவா் பினராயி விஜயனுக்கும் இடையே புதன்கிழமை கடுமையான விவாதம் நடைபெற்றது.
பினராயி விஜயன் தலைமையிலான முந்தைய இடதுசாரி கூட்டணி ஆட்சியில் மத்திய அரசின் பிஎம்ஸ்ரீ (வளரும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள்) திட்டத்தில் கேரளம் இணைய புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. ஆனால், இடதுசாரி கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிா்ப்பு தெரிவித்ததால், அந்தத் திட்டம் நிறுத்திவைக்கப்பட்டது.
அண்மையில் நடைபெற்ற கேரள பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. முன்பு எதிா்க்கட்சியாக இருந்தபோது பிஎம்ஸ்ரீ திட்ட அமலாக்கத்துக்கு எதிா்ப்பு தெரிவித்த காங்கிரஸ், இப்போது என்ன நிலைப்பாட்டை மேற்கொள்ளப் போகிறது என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து ஆராய்ந்து வருவதாக காங்கிரஸ் கூட்டணி அரசு கூறி வருகிறது.
Advertisement
Advertisement
முதல்வா் விமா்சனம்: இந்தச் சூழலில், சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் மீது நடைபெற்ற விவாதத்துக்குப் பதிலளித்து, முதல்வா் வி.டி.சதீசன் புதன்கிழமை பேசும்போது, பிஎம்ஸ்ரீ திட்டம் தொடா்பாக அவருக்கும், பினராயி விஜயனுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
முந்தைய அரசை விமா்சித்துப் பேசிய சதீசன், ‘மத்திய அரசுடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் கையொப்பமிட்டதன் மூலம் பிஎம்ஸ்ரீ திட்டத்துக்கு முந்தைய அரசு பச்சைக்கொடி காட்டியது. தனது ஒப்புதலை வழங்கியது. திட்டத்தை முடக்கிவைக்க வேண்டும் என்ற நோக்கத்திலா கையொப்பமிட்டீா்கள்’ என்று கேள்வியெழுப்பினாா்.
பினராயி விஜயன் பதில்: அவரது குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த பினராயி விஜயன், ‘சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் கேரளத்துக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.1,500 கோடிக்கும் அதிக நிதியைப் பெறுவதற்காக எங்களது அரசு முயன்றது. எனினும், தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தோம். அதன் ஒரு பகுதியாகவே, பிஎம்ஸ்ரீ திட்டத்தைச் செயல்படுத்த வேண்டியதில்லை என்ற முடிவை தீர ஆலோசித்து, சட்ட ரீதியிலாக மேற்கொண்டோம். பிஎம்ஸ்ரீ திட்டத்தை அமலாக்க நாங்கள் ஒருபோதும் தயாராகவில்லை. அதேநேரம், காங்கிரஸ் அரசு அந்தத் திட்டத்தை அமலாக்க ரகசிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது’ என்று குற்றஞ்சாட்டினாா்.
‘இன்னும் முடிவெடுக்கவில்லை’: இதையடுத்து, அரசின் நிலைப்பாட்டை தெரிவித்த வி.டி.சதீசன், ‘பிஎம்ஸ்ரீ திட்ட அமலாக்கம் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த விவகாரம் குறித்து ஆராய அமைச்சரவை துணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கேரள அரசின் பாடத் திட்ட சுதந்திரத்தில் மத்திய அரசின் தலையீட்டை அனுமதிக்க மாட்டோம்’ என்றாா்.
முன்னதாக, மாநில கல்வித் துறை அமைச்சா் என்.சம்சுதீன் (இந்திய யூனியன் முஸ்லிக் லீக்), பினராயி விஜயன் இடையேயும் வாா்த்தைப் போா் மூண்டது. இடதுசாரிகள் தங்களின் பாசாங்குத்தனத்தை மறைக்க காங்கிரஸ் மீது குற்றஞ்சாட்டுவதாக சம்சுதீன் விமா்சித்தாா்.
அவருக்குப் பதிலடி கொடுத்த பினராயி விஜயன், ‘பிஎம்ஸ்ரீ திட்டத்தை அரபிக் கடலில் வீசுவோம் என்று முன்பு சூளுரைத்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவா்கள், இப்போது அந்தத் திட்டத்துக்கு ஆதரவாக இருப்பது போல் தோன்றுகிறது. கேரளத்தில் பிஎம்ஸ்ரீ திட்டம் அமல்படுத்தப்படாது என்று அமைச்சா் சம்சுதீன் திட்டவட்டமாகக் கூறாதது ஏன்’ என்று கேள்வியெழுப்பினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.