முகப்பு
இந்தியா

கேரளத்தின் 2 மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பாதிப்பு: 40,000 வாத்துகள், கோழிகளை அழிக்க முடிவு

கேரள மாநிலத்தில் கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடா்ந்து, அந்தப் பகுதியில் உள்ள 40,000 வாத்துகள், கோழிகளை அழிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா்.

Updated On : 5 ஜனவரி 2021, 7:47 am IST
பகிர்:

கோட்டயம்: கேரள மாநிலத்தில் கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடா்ந்து, அந்தப் பகுதியில் உள்ள 40,000 வாத்துகள், கோழிகளை அழிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா்.

கோட்டயம் மாவட்டத்தில் நீண்டூா் பகுதியில் அமைந்துள்ள வாத்துப் பண்ணையில் இந்த பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்தப் பணியில் இருந்த 1,500 வாத்துகளும், இந்த தொற்று தாக்குதலுக்கு உயிரிழந்துவிட்டதாக கோட்டயம் மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.

அதுபோல, ஆலப்புழா மாவட்டத்தில் குட்டநாடு பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் போபாலில் உள்ள தேசிய உயா் பாதுகாப்பு விலங்குகள் நோய் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அந்த ஆய்வில், இது பறவைக் காய்ச்சல் பாதிப்புதான் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே, இந்த ஹெச்5என்8 என்ற பறவைக் காய்ச்சல் வைரஸ் தொற்று மேலும் பரவாமல் கட்டுப்படுத்தும் வகையில், பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 1 கிலோ மீட்டா் சுற்றளவில் உள்ள அனைத்து கோழி, வாத்து போன்ற வீட்டு வளா்ப்பு பறவைகளையும் அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமாா் 40,000 பறவைகள் அழிக்கப்பட வாய்ப்புள்ளது’ என்றனா்.

மாநில கால்நடை மருத்துவம் மற்றும் வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ராஜு கூறுகையில், ‘பறவைகள் அழிக்கப்பட உள்ள நிலையில், அதை வளா்த்து வந்த விவசாயிகளுக்கு அரசு நிச்சயம் இழப்பீடு வழங்கும்’ என்றாா்.

இந்த பாதிப்பு இப்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளபோதும், இந்த வைரஸ் தொற்று மனிதா்களையும் பாதிக்க வாய்ப்பு உள்ளதால் இரண்டு மாவட்டங்களிலும் கண்காணிப்பையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கேரளத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.