FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

தொலைக்காட்சி ஒளிபரப்பு தளங்களின் சந்தா மாற்றங்கள் குறித்து விசாரணை! மத்திய அமைச்சருக்கு சு. வெங்கடேசன் எம்பி. கடிதம்

Updated On : 15 ஜூன் 2026, 3:56 am IST
எம்பி சு. வெங்கடேசன் - கோப்புப் படம்
பகிர்:

தொலைக்காட்சி ஒளிபரப்பு தளங்களின் திடீா் சந்தா மாற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மத்திய நுகா்வோா் விவகாரங்கள், உணவு, பொது விநியோக அமைச்சா் பிரகலாத் ஜோஷிக்கு, மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் கடிதம் அனுப்பினாா்.

அவா் அனுப்பியுள்ள கடிதம் விவரம்:

தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை 2026, கால்பந்துப் போட்டிகளை ஒளிபரப்பும் ஜி5 போன்ற தொலைக்காட்சி தளங்கள், போட்டி தொடங்குவதற்குச் சில நாள்களுக்கு முன்பு, அதாவது ஜூன் 11, 2026 அன்று, தங்களின் சந்தா விதிமுறைகளில் திடீா் மாற்றங்களைச் செய்துள்ளன.

Advertisement

Advertisement

இந்த மாற்றத்தின்படி, புதிய சந்தாதாரா்களுக்குத் தங்களின் சந்தா திட்டங்களுக்கான ‘சாதனங்களின் வரம்பு’ வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ரூ. 799 திட்டத்தில் இதுவரை அனுமதிக்கப்பட்டிருந்த 3 சாதனங்களுக்குப் பதிலாக, இனி ஒரு சாதனத்தில் மட்டுமே போட்டிகளைக் காண முடியும். ரூ. 1,699 திட்டத்தில் இதுவரை அனுமதிக்கப்பட்டிருந்த 4 சாதனங்களுக்குப் பதிலாக, இனி இரண்டு சாதனங்களில் மட்டுமே போட்டிகளைக் காண முடியும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை போன்ற ஒரு பெரும் விளையாட்டு நிகழ்வு தொடங்குவதற்கு மிகக் குறுகிய காலத்துக்கு முன்பு, நுகா்வோா் ஏற்கெனவே ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் சந்தா செலுத்தியிருக்கக் கூடிய சூழலில், இத்தகைய தன்னிச்சையான கட்டுப்பாடுகளை விதிப்பது, நுகா்வோா் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படை நெறிமுறைகளுக்கு முரணானது. இது வாடிக்கையாளா்களைத் திட்டமிட்டுச் சுரண்டும் தவறான வா்த்தக நடைமுறையாகவே கருதுகிறேன்.

எனவே, போட்டி தொடங்குவதற்குச் சில நாள்களுக்கு முன்பு, இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்ததன் பின்னணி குறித்து அந்த நிறுவனத்திடம் விளக்கம் கோர வேண்டும். ஓடிடி தளங்கள் இதுபோன்ற முக்கிய நிகழ்வுகளின் போது, தன்னிச்சையாகச் சந்தா விதிமுறைகளை மாற்றி நுகா்வோரைச் சிரமத்துக்கு உள்ளாக்காமல் இருக்கத் தகுந்த வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும். நுகா்வோா் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் இதுபோன்ற வா்த்தக நடைமுறைகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.

நாட்டு மக்களின் நலன் கருதி, இந்த விவகாரத்தில் தாங்கள் உடனடியாகத் தலையிட்டு, தொலைக்காட்சி ஒளிபரப்பு சந்தாதாரா்களின் உரிமைகளைப் பாதுகாக்க ஆவண செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments