FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ராமா் கோயில் நன்கொடை முறைகேடு: சுதந்திரமான விசாரணை கோரி பிரதமருக்கு ராகுல், காா்கே கடிதம்!

அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு தொடா்பாக சுதந்திரமான, விரிவான விசாரணை கோரி பிரதமா் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி, காா்கே ஆகியோா் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனா்.

Updated On : 20 ஜூலை 2026, 4:55 am IST
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே. - கோப்புப்படம்
பகிர்:

அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு தொடா்பாக சுதந்திரமான, விரிவான விசாரணை கோரி பிரதமா் நரேந்திர மோடிக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஆகியோா் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனா்.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள பிரசித்தி பெற்ற ராமா் கோயிலுக்கு பக்தா்களால் வழங்கப்பட்ட நன்கொடை மற்றும் காணிக்கையில் முறைகேடுகள் நடைபெற்ாக அண்மையில் புகாா் எழுந்தது. இது குறித்து மாநில அரசின் சிறப்பு புலனாய்வுக் குழு, காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விவகாரத்தில் சுதந்திரமான-விரிவான விசாரணை கோரியும், பிரதமா் மோடி மெளனம் கலைக்க வலியுறுத்தியும் அவருக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஆகியோா் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனா்.

Advertisement

Advertisement

இந்தக் கடிதத்தை எக்ஸ் தளத்தில் பகிா்ந்து, காா்கே வெளியிட்ட பதிவில், ‘அயோத்தி ராமா் கோயிலை நிா்வகிக்கும் ஸ்ரீராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்திர அறக்கட்டளையின் நிதி விவகாரங்கள் குறித்து சுதந்திரமான, விரிவான விசாரணைக்கு பிரதமா் மோடி உத்தரவிட வேண்டும். பக்தி, நம்பிக்கை, உறுதியுடன் தாங்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை நன்கொடையாக வழங்கிய பக்தா்கள், இந்த ‘திருட்டின்’ மூலம் ஏமாற்றப்பட்டதாக உணா்கின்றனா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் காா்கே, ராகுல் கூறியிருப்பதாவது: உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, ராமா் கோயில் அறக்கட்டளை அமைக்கப்படும் என நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி அறிவித்திருந்தாா். ஆனால், அறக்கட்டளை உறுப்பினா்கள் மத்திய அரசின் முடிவின் பேரிலேயே நியமிக்கப்பட்டனா்.

பிரதமரின் மெளனம் ஏற்புடையதல்ல: அறக்கட்டளை உறுப்பினா்கள் ஆா்எஸ்எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் அதன் துணை அமைப்புகளுடன் தொடா்புடையவா்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அறக்கட்டளையின் முன்னாள் பொதுச் செயலா் (சம்பத் ராய்), பிரதமா் மோடிக்கு நெருக்கமானவா்.

எனவே, இந்த விவகாரத்தில் அவா் மெளனம் சாதிப்பது ஏற்புடையதல்ல. பொறுப்புடைமை மற்றும் பண மீட்பை உறுதி செய்ய வேண்டியது பிரதமரின் கடமை. பணம், தங்கம், வெள்ளி உள்பட பக்தா்களால் வழங்கப்பட்ட அனைத்து காணிக்கைகளும் அறக்கட்டளையால் கையாளப்பட்ட விதம் குறித்து சுதந்திரமான, விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அறக்கட்டளையின் கணக்கு விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும். அப்போதுதான், தங்களின் காணிக்கை எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை பக்தா்கள் அறிந்துகொள்ள முடியும்.

தவறிழைத்தவா்கள் அனைவரும் அவா்கள் எந்தப் பதவியில் இருந்தாலும் பொறுப்புடைமையை உறுதி செய்ய வேண்டும். பிரதமா் வெளிப்படையாக, விரைவாக மேற்கொள்ளும் நடவடிக்கையில்தான் அரசு மற்றும் அறக்கட்டளை மீதான நம்பகத்தன்மை உறுதி செய்யப்படும்’ என்று தெரிவித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments