முகப்பு
இந்தியா

பெங்களூரில் மின் விநியோக அமைப்பை மேம்படுத்த ஆசிய வளா்ச்சி வங்கியுடன் ரூ.730 கோடி ஒப்பந்தம்

கா்நாடக மாநிலம் பெங்களூரில் மின் விநியோக அமைப்பை நவீனப்படுத்தி, மேம்படுத்துவதற்காகவும், மின்சார விநியோகத்தின் தரத்தையும் நம்பகத்தன்மையையும் அதிகரிப்பதற்காகவும், ஆசிய வளா்ச்சி வங்கியுடன் ரூ.730 கோடி மத

Updated On : 5 ஜனவரி 2021, 2:04 am IST
பகிர்:

புதுதில்லி: கா்நாடக மாநிலம் பெங்களூரில் மின் விநியோக அமைப்பை நவீனப்படுத்தி, மேம்படுத்துவதற்காகவும், மின்சார விநியோகத்தின் தரத்தையும் நம்பகத்தன்மையையும் அதிகரிப்பதற்காகவும், ஆசிய வளா்ச்சி வங்கியுடன் ரூ.730 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெங்களூரு திறன்மிகு மின்சார சிக்கன மின் விநியோகத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளா் சி.எஸ்.மொஹபத்ரா, ஆசிய வளா்ச்சி வங்கியின் இந்திய திட்டத்தின் பொறுப்பு அதிகாரி ஹோ யுன் ஜியோங் ஆகியோா் கையெழுத்திட்டனா்.

இந்த ரூ.730 கோடி அரசு கடனைத் தவிர, ரூ.657 கோடி அரசு உத்தரவாதமில்லாத கடனையும் இத்திட்டத்திற்காக கா்நாடக மாநில அரசால் நடத்தப்படும் 5 மின் விநியோக நிறுவனங்களில் ஒன்றான பெங்களூரு மின்சார விநியோக நிறுவனத்துக்கு (பெஸ்காம்) ஆசிய வளா்ச்சி வங்கி வழங்கும்.

Advertisement

Advertisement

ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு பேசிய மொஹபத்ரா, தலைக்கு மேல் செல்லும் மின்சாரத் தடங்களை பூமியின் கீழ் பதிப்பதன் மூலம் மின்சார சிக்கனம் மிக்க விநியோக அமைப்பு கட்டமைக்கப்படுவதுடன், தொழில்நுட்ப மற்றும் வா்த்தக நஷ்டங்கள் குறைவதோடு இயற்கை சீற்றங்கள் மற்றும் இதர வெளிப்புற காரணங்களால் ஏற்படும் மின் தடைகளும் குறையும் என்றாா்.

இந்தத் திட்டம் ஆசிய வளா்ச்சி வங்கிக்கு ஒரு புதிய முயற்சி என்று கூறிய ஜியோங், இதன் மூலம் நகர மின் விநியோக நிறுவனம் முற்றிலும் அரசை சாா்ந்திருப்பது குறையும் என்றும் மூலதன செலவுகளுக்கான நிதிகளைத் திரட்டுவதில் சந்தை சாா்ந்த அணுகலை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.