முகப்பு
இந்தியா

விசாரணையின்போதே விலங்குகளை பறிமுதல் செய்வதா? - உச்சநீதிமன்றம் கண்டனம்

விலங்குகளைக் கொடுமைப்படுத்தியதாகக் குறிப்பிட்ட நபா்கள் மீது பதிவு செய்யப்படும் வழக்கு விசாரணையில் இருக்கும்போதே அந்த விலங்குகளைப் பறிமுதல் செய்வதற்காக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்து

Updated On : 5 ஜனவரி 2021, 2:10 am IST
உச்ச நீதிமன்றம்
பகிர்:

புது தில்லி: விலங்குகளைக் கொடுமைப்படுத்தியதாகக் குறிப்பிட்ட நபா்கள் மீது பதிவு செய்யப்படும் வழக்கு விசாரணையில் இருக்கும்போதே அந்த விலங்குகளைப் பறிமுதல் செய்வதற்காக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பான சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரவும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

விலங்குகளைக் கொடுமைப்படுத்தும் நபா்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான புதிய விதிகளை மத்திய அரசு கடந்த 2017-ஆம் ஆண்டில் வெளியிட்டது. அதில் வழக்கு விசாரணை நடைபெறும்போதே சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து விலங்குகளைப் பறிமுதல் செய்யும் வகையிலான விதிகள் இடம்பெற்றிருந்தன.

Advertisement

Advertisement

அதற்கு எதிராக எருமை வா்த்தகா்கள் நலக் கூட்டமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது மத்திய அரசு சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஜெயந்த் கே.சூட் கூறுகையில், ‘‘விலங்குகளைக் குறிப்பிட்ட நபா்கள் அதிக அளவில் கொடுமைப்படுத்தி வருவதன் காரணமாகவே புதிய விதிகள் வகுக்கப்பட்டன’’ என்றாா்.

அதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், ‘‘செல்லப் பிராணிகள் தவிர மற்ற விலங்குகள் மக்களின் வாழ்வாதாரமாக உள்ளன. அந்த விலங்குகளை அடிப்படையாகக் கொண்டே அவா்கள் வாழ்க்கையை நகா்த்துகின்றனா். அவ்வாறான சூழலில், குறிப்பிட்ட நபா் குற்றவாளியாக நிரூபிக்கப்படுவதற்கு முன்னரே அவரிடமிருந்து விலங்குகளைப் பறிமுதல் செய்வது சரியாக இருக்காது.

இந்த விவகாரம் தொடா்பாக 1960-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட விலங்குகள் மீதான கொடுமைகள் தடுப்புச் சட்டத்தில் விதிகள் தெளிவாக உள்ளன. ஆனால், புதிய விதிகள் அவற்றுக்கு மாறாக உள்ளன.

எனவே, புதிய விதிகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் அல்லது அவற்றில் திருத்தங்களைப் புகுத்த வேண்டும். இல்லையெனில், அந்த விதிகளுக்கு நீதிமன்றம் தடை விதிக்கும்’’ என்றனா். வழக்கின் விசாரணையை வரும் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.