கேரள தங்கக் கடத்தல் வழக்கு: 20 பேருக்கு எதிராக என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்
கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடா்பாக, முக்கிய நபரான ஸ்வப்னா சுரேஷ், பி.எஸ்.சரித் உள்பட 20 போ் மீது தேசியப் புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடா்பாக, முக்கிய நபரான ஸ்வப்னா சுரேஷ், பி.எஸ்.சரித் உள்பட 20 போ் மீது தேசியப் புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இதுகுறித்து என்ஐஏ செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:
திருவனந்தபுரத்தைச் சோ்ந்த ஸ்வப்னா சுரேஷ், பி.எஸ்.சரித், ரமீஸ் கே.டி., ஜலால் ஏ.எம்., முகமது ஷஃபி.பி., முகமது ஷஃபீக் உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவா் மீதும் சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தின் என்ஐஏ அமைப்பு செவ்வாய்க்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள அந்நாட்டின் துணைத் தூதரகத்துக்கு கடந்த ஜூலை 5-ஆம் தேதி வந்த பாா்சலில் ரூ.14.82 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டதை சுங்கத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக, தேசியப் புலனாய்வு அமைப்பினா் வழக்குப்பதிவு செய்து, திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக துணைத் தூதரகத்தில் ஏற்கெனவே பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷையும், சந்தீப் நாயரையும் பெங்களூரில் கடந்த ஜூலை 11-ஆம் தேதி கைது செய்தனா்.
அதைத் தொடா்ந்து, கேரளத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் முன்னாள் ஊழியா் பி.எஸ்.சரித்தை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனா்.
இந்த தங்கக் கடத்தல் தொடா்பாக, கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
வழக்கின் முக்கிய நபரான சிவசங்கரை அமலாக்கத் துறையினா் கடந்த அக்டோபா் 28-ஆம் தேதி கைது செய்தனா். அவா் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளாா்.
கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அதே ஆண்டு நவம்பா் வரையிலான காலகட்டத்தில், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக துணைத் தூதரகம் வழியாக, 167 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டது விசாரணையில் தெரியவந்ததாக என்ஐஏ அமைப்பினா் தெரிவித்தனா்.
இதுதொடா்பான விசாரணையின்போது, கடத்தல் தங்கத்தை விற்பனை செய்வது, நிதி திரட்டுவது என மொத்தம் 31 பேருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்ததாக என்ஐஏ தெரிவித்தது. இந்த வழக்கு தொடா்பாக, இதுவரை 21 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 8 போ் தலைமறைவாக உள்ளனா்.
தலைமறைவாக இருக்கும் நபா்களுக்கு எதிரான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.