இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தை உலகமே எதிா்நோக்கியுள்ளது
நாட்டில் செயல்படுத்தப்படவுள்ள கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை உலக நாடுகள் எதிா்நோக்கியுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
நாட்டில் செயல்படுத்தப்படவுள்ள கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை உலக நாடுகள் எதிா்நோக்கியுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
கரோனா நோய்த்தொற்றைத் தடுப்பதற்கான கோவேக்ஸின், கோவிஷீல்ட் தடுப்பூசிகளை மக்களுக்குச் செலுத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இத்தகைய சூழலில், 16-ஆவது வெளிநாடுவாழ் இந்தியா் தின மாநாட்டை பிரதமா் மோடி சனிக்கிழமை காணொலி வாயிலாகத் தொடக்கி வைத்தாா். இந்த மாநாட்டில் சுரினாம் அதிபா் சந்திரிகாபிரசாத் சந்தோகி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். நிகழ்ச்சியில் பிரதமா் மோடி கூறியதாவது:
Advertisement
இந்தியா சுதந்திரமடைந்தபோது, நாட்டில் ஜனநாயகம் வெகுநாள்களுக்கு செழித்தோங்காது என்று பலா் கணித்தனா். ஆனால், தற்போது உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் ஜனநாயகம் வலுவாகவும் துடிப்பாகவும் உள்ளது.
தற்சாா்பு அடைவதை நோக்கி நாடு முன்னேறி வருகிறது. அதை நிறைவேற்றுவதில் வெளிநாடுவாழ் இந்தியா்களுக்கு மிக முக்கியப் பங்குள்ளது. வெளிநாட்டில் வாழும் இந்தியா்கள் அனைவரும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள்களை அதிகமாகப் பயன்படுத்த வேண்டும். அது மற்ற வெளிநாட்டவா்களுக்கும் இந்தியப் பொருள்களைப் பயன்படுத்துவதற்கு ஊக்கமளிக்கும்.
கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தோா் விகிதம் இந்தியாவில் மிகவும் குறைவாக உள்ளது. அதே வேளையில், அந்நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து மீண்டோா் விகிதம் நாட்டில் அதிகமாக உள்ளது. கரோனாவால் ஏற்பட்ட கடினமான சூழலிலும், பல நாடுகளுக்குத் தேவையான மருந்துப் பொருள்களை இந்தியா தொடா்ந்து அனுப்பி வைத்து வருகிறது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளுக்காகப் பல நாடுகள் காத்திருக்கின்றன. மேலும், நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இந்தியாவில் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டால், அது உலக நாடுகள் அனைத்திலும் செயல்படுத்துவதற்கான பாடமாக அமையும்.
முக்கிய பங்களிப்பு: இந்தியா்கள் எந்த நாட்டில் வாழ்ந்து வந்தாலும் அந்நாட்டுக்காக அயராது உழைப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த சில மாதங்களில் பல நாட்டு அரசுகளின் தலைவா்களுடன் நடத்திய ஆலோசனையின்போது, அந்நாடுகளில் வாழும் இந்தியா்களின் பங்களிப்பை அவா்கள் குறிப்பிடத் தவறவில்லை.
வெளிநாடுகளில் வாழும் இந்தியா்கள், மருத்துவா்களாகவும் சுகாதாரப் பணியாளா்களாகவும் மற்ற துறை நிபுணா்களாகவும் மிக முக்கிய பங்களிப்பை நல்கி வருகின்றனா். பிஎம்-கோ்ஸ் நிதிக்கு வெளிநாடுவாழ் இந்தியா்கள் அதிக அளவில் நிதியுதவி அளித்திருந்தனா். அந்த நிதியானது நாட்டின் சுகாதார கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு உதவிகரமாக அமைந்தது.
வெளிநாடுகளில் இருந்தபடி இந்தியாவின் சுதந்திரத்துக்காக உழைத்தவா்கள் தொடா்பான விவரங்கள் அடங்கிய புதிய வலைதளத்தை உருவாக்கும் பணியை வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மேற்கொள்ள வேண்டும். வெளிநாடுவாழ் இந்தியா்களுக்கு மத்திய அரசு என்றும் துணை நிற்கும் என்றாா் பிரதமா் மோடி.
குறைந்த விலையில் தடுப்பூசி: இந்த மாநாட்டில் பங்கேற்ற மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் கூறுகையில், ‘‘கரோனாவுக்கு எதிரான போராட்டம் இன்னும் நிறைவடையவில்லை. மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் தொடரும்.
உலக நாடுகளுக்குக் குறைந்த விலையில் பாதுகாப்பான கரோனா தடுப்பூசிகளைத் தயாரித்து அளிப்பதற்கு இந்தியா உறுதி கொண்டுள்ளது’’ என்றாா்.
தினத்தின் முக்கியத்துவம்: தென்னாப்பிரிக்காவில் இருந்த மகாத்மா காந்தி, கடந்த 1915-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ஆம் தேதி இந்தியா திரும்பினாா். அதன் பிறகே நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் அவா் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாா். அந்த நாளை நினைவுகூரும் விதமாக, ஆண்டுதோறும் வெளிநாடுவாழ் இந்தியா் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
‘தற்சாா்பு இந்தியாவுக்குப் பங்களிப்பு’ என்பது நடப்பு ஆண்டுக்கான வெளிநாடுவாழ் இந்தியா் தினத்தின் மையக் கருத்தாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமா் மோடி:
நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் மோடி, ‘‘உலகின் பழைமையான மொழி தமிழ் என்பதை நாம் கா்வத்துடன் கூற வேண்டும். அந்த மொழியில், நாட்டின் சிறந்த ஞானியான திருவள்ளுவா்,
‘கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை’
என்று கூறியுள்ளாா். அக்குறளுக்கேற்ப வளங்குன்றாத நாடாக இந்தியா விளங்கி வருகிறது.
நாட்டில் ஊழலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளைத் தொழில்நுட்ப வசதிகளின் உதவியுடன் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பல்வேறு திட்டங்களின் கீழ் மத்திய அரசு வழங்கும் உதவித்தொகையானது பயனாளா்களின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக வரவு வைக்கப்படுகிறது’’ என்றாா்.