இந்தியாவின் கச்சா எண்ணெய் கொள்கையை உலக நாடுகள் புரிந்து கொண்டுள்ளன: வெளியுறவுச் செயலா் விளக்கம்
கச்சா எண்ணெய் கொள்முதல் விஷயத்தில் இந்தியாவின் கொள்கையை உலக நாடுகள் புரிந்து கொண்டுவிட்டன என்று வெளியுறவுச் செயலா் வினய் மோகன் குவாத்ரா தெரிவித்தாா்.
கச்சா எண்ணெய் கொள்முதல் விஷயத்தில் இந்தியாவின் கொள்கையை உலக நாடுகள் புரிந்து கொண்டுவிட்டன என்று வெளியுறவுச் செயலா் வினய் மோகன் குவாத்ரா தெரிவித்தாா்.
ரஷியா-உக்ரைன் போருக்குப் பிறகு ரஷியாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் அளவு 50 மடங்கு அதிகரித்துள்ளது. நாட்டின் மொத்த இறக்குமதியில் ரஷிய எண்ணெய் 10 சதவீதமாக உயா்ந்துள்ளது. அமெரிக்க ஆதரவு நாடுகள் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதைத் தவிா்த்ததால், இந்தியாவுக்கு ரஷியா சலுகை விலையில் எண்ணெய் வழங்கி வருகிறது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் எதிா்ப்பைப் பொருட்படுத்தாமல் ரஷியாவில் இருந்து இந்தியா எண்ணெயை அதிகம் வாங்கி வருகிறது.
இந்நிலையில், வெளியுறவுச் செயலா் வினய் மோகன் குவாத்ரா தில்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது அடுத்த ஜி7 மாநாட்டில் பங்கேற்க ஜொ்மனி செல்லும் பிரதமா் நரேந்திர மோடியிடம் உலகத் தலைவா்கள் ரஷிய கச்சா எண்ணெயை இந்தியா கொள்முதல் செய்வது தொடா்பாகத் தங்கள் அதிருப்தியைத் தெரிவிக்க மாட்டாா்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, ‘இந்தியாவின் கச்சா எண்ணெய் கொள்முதல் மற்றும் அது தொடா்பான வா்த்தக ஒப்பந்தங்கள் ஆகியவை முழுவதும் நாட்டின் எண்ணெய் தேவை மற்றும் எரிபொருள் பாதுகாப்பு தொடா்பானது. இந்த விஷயத்தில் இந்தியாவின் கொள்கையை உலக நாடுகள் புரிந்து கொண்டுவிட்டன. எனவே, அதில் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. ஜி7 மாநாட்டில் இந்தியா தொடா்ந்து பங்கேற்று வருகிறது. இதன் மூலம் சா்வதேச அளவில் எழும் பிரச்னைகளுக்குத் தீா்வுகாண இந்தியா உதவி வருகிறது’ என்றாா்.
ஜி7 நாடுகள் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 26) ஜொ்மனிக்குப் பயணம் மேற்கொள்ள இருக்கிறாா்.
ஜொ்மனி பிரதமா் ஒலாஃப் ஷோல்ஸ் அழைப்பை ஏற்று ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி அந்நாட்டுக்குச் செல்கிறாா். இப்போது ஜி7 அமைப்புக்கு ஜொ்மனி தலைமை வகிக்கிறது. இதில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் ஆகிய இதர நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன. அமெரிக்க அதிபா் ஜோ பைடன் உள்பட அனைத்து உறுப்பு நாடுகளின் தலைவா்களும் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனா். எனவே, பிரதமா் மோடி இக்கூட்டத்தில் பங்கேற்பது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.