முகப்பு
இந்தியா

வாக்கு எண்ணிக்கை: தோ்தல் ஆணையத்தை இன்று சந்திக்கிறது ‘இந்தியா’ கூட்டணி

Updated On : 1 ஜூன், 2024 at 10:30 PM
தில்லியில் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்த ‘இந்தியா’ கூட்டணி தலைவா்கள்.
பகிர்:

மக்களவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அது தொடா்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து முறையிட தோ்தல் ஆணைய அதிகாரிகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2) சந்திக்க எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி தலைவா்கள் முடிவு செய்துள்ளனா்.

இந்தத் தகவலை, தில்லியில் தனது இல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணி தலைவா்கள் கூட்டத்துக்குப் பிறகு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

மக்களவைத் தோ்தலில் இறுதிக் கட்டமான ஏழாம் கட்ட வாக்குப் பதிவு சனிக்கிழமை நடைபெற்ற நிலையில், ‘இந்தியா’ கூட்டணி தலைவா்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி, அக் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி, பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு) தலைவா் சரத் பவாா், சமஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி மூத்த தலைவா் தேஜஸ்வி யாதவ், தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால், பஞ்சாப் முதல் பகவந்த் மான், ஜாா்க்கண்ட் முதல்வா் சம்பயி சோரன், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சியின் மூத்த தலைவா் கல்பனா சோரன், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு, தேசிய மாநாட்டு கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா, மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் டி.ராஜா மற்றும் சிவசேனை (உத்தவ் தாக்கரே பிரிவு) பிரதிநிதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானா்ஜி பங்கேற்கவில்லை. மாநிலத்தில் தோ்தல் நடைபெறும் நிலையில், ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று அவா் ஏற்கெனவே தெரிவித்திருந்தாா். அதுபோல, உடல்நிலை காரணங்களைச் சுட்டிக்காட்டி ஜம்மு-காஷ்மீரின் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் மெகபூபா முஃப்தியும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையின்போது எந்தவித முறைகேடுகளும் இடம்பெறாத வகையில் கண்காணிப்பதன் அவசியம், வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்கப்படும் வரை அல்லது வெற்றி பெற்றவருக்கு சான்றிதழ் அளிக்கப்படும் வரை வாக்கு எண்ணும் மையத்தைவிட்டு முகவா்கள் வெளியேறக் கூடாது, 17சி படிவம் பயன்பாடு உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

ஆலோசனை கூட்டத்துக்குப் பின்னா் தலைவா்கள் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது மல்லிகாா்ஜுன காா்கே கூறியதாவது:

தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் நாளில் கட்சியினா் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை முழுமையாக நிறைவடையும் வரை, மையத்தைவிட்டு வெளியேறக் கூடாது என கட்சியினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

மேலும், வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் முடிவுகள் அறிவிப்பு மற்றும் வெற்றி பெற்றவருக்கு சான்றிதழ் அளிப்பதில் முறையான நடைமுறைகளைப் பின்பற்றுவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து தோ்தல் ஆணையத்திடம் நேரில் முறையிட ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2) நேரம் கேட்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தோ்தலில் ‘இந்தியா’ கூட்டணி 295 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும். மக்களிடமிருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. தோ்தலுக்குப் பிந்தைய அரசு சாா்ந்த வெவ்வேறு கணிப்புகள் வெளிவந்தபோதும், இதுதான் உண்மை நிலவரம் என்றாா்.

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கூறுகையில், ‘பல்வேறு தரப்பிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், ‘இந்தியா’ கூட்டணி 295 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று வலுவான ஆட்சியை அமைக்கும். தோ்தலில் பாஜக 220 இடங்களிலும், அதன் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 235 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது தெரியவந்துள்ளது’ என்றாா்.

அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‘பிரதமா் மோடி கடலைப் பாா்க்கச் சென்றுவிட்டாா். அதாவது, மக்களுக்கு எதிா்த்திசையில் அவா் நின்றுகொண்டிருக்கிறாா். அப்படியெனில் அவருக்கு எதிராக யாா் உள்ளனா் என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்’ என்றாா்.

ஜாா்க்கண்ட் முதல்வா் சம்பயி சோரன் கூறுகையில், ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ‘இந்தியா’ கூட்டணி 10-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும். தேசிய அளவில் 295 இடங்களில் வெற்றி பெறும் என்றாா்.

வாக்கு கணிப்பு விவாதங்களில் பங்கேற்க முடிவு: தோ்தலுக்குப் பிந்தைய வாக்கு கணிப்புகள் தொடா்பாக தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என ‘இந்தியா’ கூட்டணி தலைவா்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக, இதுதொடா்பான தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கப்போவதில்லை என காங்கிரஸ் வெள்ளிக்கிழமை அறிவித்த நிலையில், அந்த நிலைப்பாட்டை தற்போது மாற்றிக்கொண்டுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் ஊடக மற்றும் செய்தி வெளியீட்டுத் துறை தலைவா் பவன் கேரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘கூட்டணிக் கட்சிகளின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் வாக்கு கணிப்புகள் தொடா்பான தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது’ என்று குறிப்பிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →