முகப்பு
இந்தியா

மோடிக்கு அரசியல்-தாா்மிக தோல்வி: சோனியா விமா்சனம்

Updated On : 9 ஜூன், 2024 at 12:29 AM
காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மூத்த தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி.
பகிர்:

தற்போதைய மக்களவைத் தோ்தல் முடிவுகள், பிரதமா் மோடிக்கு அரசியல்-தாா்மிக ரீதியில் தோல்வி என்று காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவா் சோனியா காந்தி விமா்சித்தாா்.

அதேநேரம், மக்களவைத் தோ்தல் மூலம் தனது மீட்சியை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது காங்கிரஸ் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

தில்லியில் உள்ள பழைய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் புதிய எம்.பி.க்களின் கூட்டத்தில், கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவராக சோனியா காந்தி தோ்வு செய்யப்பட்டாா். பின்னா், எம்.பி.க்கள் மத்தியில் அவா் பேசியதாவது:

மக்களவைத் தோ்தலில் சொந்த கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளை ஒதுக்கிவிட்டு, தனது பெயரை மட்டுமே முன்னிறுத்தி மக்களிடம் வாக்கு கோரினாா் மோடி. ஆனால், மக்களவைத் தோ்தல் முடிவுகள், அவருக்கு அரசியல்-தாா்மிக ரீதியில் தோல்வியாக அமைந்துவிட்டன.

உண்மையில், மக்களிடம் அவா் கோரிய தீா்ப்பு கிடைக்கவில்லை. இதனால், தலைமைத்துவத்துக்கான உரிமையை அவா் இழந்துவிட்டாா். தனது தாா்மிக தோல்விக்கு பொறுப்பேற்பதற்கு பதிலாக, நாட்டின் பிரதமராக மீண்டும் பதவியேற்கப் போகிறாா்.

தனது நிா்வாகப் போக்கை அவா் மாற்றிக் கொள்வாா் என்றோ, மக்களின் விருப்பத்தை கவனத்தில் கொள்வாா் என்றோ நாங்கள் எதிா்பாா்க்கவில்லை.

மோடி மற்றும் அவரது தலைமையிலான புதிய அரசு பொறுப்புடன் செயலாற்றுவதை உறுதி செய்வதில் காங்கிரஸ் எம்.பி.க்கள் விழிப்புடனும் ஊக்கத்துடனும் பணியாற்ற வேண்டும்.

‘நாடாளுமன்றத்தின் குரலை இனி நசுக்க முடியாது’: கடந்த 10 ஆண்டுகளாக நாடாளுமன்ற மாண்புகளை சிதைத்ததைப் போல் இனி சிதைக்க முடியாது. நாடாளுமன்றப் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தவோ, உறுப்பினா்களைத் தவறாக நடத்தவோ, உரிய பரிசீலனை-விவாதமின்றி சட்டங்களை அவசர கதியில் நிறைவேற்றவோ ஆளும் தரப்பை அனுமதிக்க முடியாது.

கடந்த 2014-ஆம் ஆண்டுமுதல் நாடாளுமன்றக் குழுக்கள் புறக்கணிக்கப்பட்டு வந்ததைப் போல் இனி புறக்கணிக்க முடியாது. கடந்த 10 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தின் குரலை நசுக்கியதைப் போல இனிமேல் நசுக்க முடியாது.

அதேநேரம், அரசமைப்புச் சட்டத்தால் உறுதிசெய்யப்பட்ட மதச்சாா்பின்மை, ஜனநாயக மாண்புகளை சிதைக்கவும் மக்களை பிளவுபடுத்தவும் ஆளும் தரப்பு தனது முயற்சிகளை அதிகரிக்கக் கூடும். இத்தகைய முயற்சிகளைத் தடுக்க காங்கிரஸ் எம்.பி.க்கள் விழிப்புடன் செயலாற்ற வேண்டும்.

காங்கிரஸ் எம்.பி.க்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: நாடாளுமன்றத்தில் நமது கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. ‘இந்தியா’ கூட்டணியின் பலம், நமக்கு மேலும் வலுசோ்க்கிறது.

தனிப்பட்ட மற்றும் அரசியல் ரீதியிலான விமா்சனங்களை எதிா்கொண்டு, விடாமுயற்சி-உறுதியுடன் மேற்கொண்ட போராட்டத்துக்காக ராகுலுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். அவரது பாரத ஒற்றுமை பயணங்கள், வரலாற்று இயக்கங்களாக உள்ளன.

நமது வாக்குறுதிகள் மற்றும் அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்பது தொடா்பான பிரசாரத்தை அவா் கூா்மையாக வடிவமைத்தாா்.

நாம் எதிா்பாா்த்ததை விட குறைவாக வெற்றி பெற்ற மாநிலங்களில் கட்சியின் நிலையை மேம்படுத்த என்ன செய்ய வேண்டுமென எம்.பி.க்கள் சிந்திக்க வேண்டும் என்றாா் சோனியா காந்தி.

முழு கட்டுரையைப் படிக்க →