காங்கிரஸ் - திரிணமூல் காங்கிரஸ் இணைப்பா?
காங்கிரஸ் - திரிணமூல் காங்கிரஸ் இணையப்போவதாகக் கூறப்படுவது பற்றி...
அகில இந்திய காங்கிரஸ் கட்சியையும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியையும் இணைப்பது குறித்து மமதா பானர்ஜியிடம் சோனியா காந்தி பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்குவங்கத்தில் நடந்து முடிந்த தேர்தலில் மமதா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது. இதையடுத்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிரிந்துள்ளது.
மேற்கு வங்க சட்டப்பேரவையில் திரிணமூல் காங்கிரஸுக்கு மொத்தம் 80 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் 58 எம்எல்ஏக்கள் மமதாவுக்கு எதிராக போர்க் கொடி தூக்கியுள்ளனர். மமதாவுக்கு எம்எல்ஏக்களின் ஆதரவு குறைந்துள்ளதால் அவருக்கு கட்சியிலேயே அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேற்று(ஜூன் 9) திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி சந்தித்துப் பேசியுள்ளார். தற்போதைய நாட்டின் அரசியல் சூழ்நிலை குறித்து இருவரும் பேசியுள்ளனர். மேலும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படுமாறு மமதாவிடம் சோனியா காந்தி கோரியுள்ளார்.
அப்போது காங்கிரஸ் - திரிணமூல் காங்கிரஸ் கட்சியை இணைப்பது குறித்து சோனியா காந்தி, மமதாவிடம் கேட்டதாகவும் அதுகுறித்து முடிவெடுக்க கால அவகாசம் வேண்டும் என்று மமதா கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு திரிணமூல், காங்கிரஸுடன் இணைந்தால் மமதா பானர்ஜிக்கு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பதவியை வழங்குவது குறித்தும் மமதாவின் மருமகனும் மக்களவை உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜிக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படும் என்றும் சோனியா தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இரு கட்சிகளும் இணையும்பட்சத்தில் பாஜகவுக்கு எதிராக கட்சியை வலுப்படுத்த முடியும் என்று சோனியா காந்தி கூறியதாகவும் சொல்லப்படுகிறது. கட்சிகளின் இணைப்பைவிட இந்தியா கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்பதே நோக்கம் என்றும் சோனியா இந்த சந்திப்பில் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல காங்கிரஸ் - திரிணமூல் காங்கிரஸ் இணையும்பட்சத்தில் மமதா பானர்ஜிக்கு மாநிலங்களவை பதவி வழங்குவது குறித்தும் பேசப்படுவதாகக் கூறப்படுகிறது. மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக மமதா இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அபிஷேக் பானர்ஜியுடன் சந்திப்பு மேற்கொண்டார். ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. நாட்டின் அரசியல் சூழல், மேற்குவங்க தேர்தல் முடிவுகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
எனினும் இரு கட்சிகளும் இணைவது குறித்து இரு தரப்பில் இருந்தும் அதிகாரபூர்வ தகவல் எதுவுமில்லை.
திரிணமூல் கட்சி, காங்கிரஸுடன் 'இந்தியா கூட்டணி'யில் மட்டும் இருக்கப் போகிறதா? அல்லது காங்கிரஸ் கட்சியுடன் முற்றிலுமாக திரிணமூல் கட்சி இணையப் போகிறதா என்பது வரும் நாள்களில் தெரியவரும்.
Sonia gandhi proposed mamata that congress and Trinamool congress merger
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.