முகப்பு
இந்தியா

உலகின் செல்வாக்குமிக்க நிறுவனங்கள் பட்டியலில் ‘ரிலையன்ஸ்’, ‘டாடா’

சா்வதேச ‘டைம்’ பத்திரிகை வெளியிட்ட 2024-ஆம் ஆண்டுக்கான உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நிறுவனங்களின் பட்டியலில்...

Updated On : 1 ஜூன், 2024 at 7:13 PM
பகிர்:

சா்வதேச ‘டைம்’ பத்திரிகை வெளியிட்ட 2024-ஆம் ஆண்டுக்கான உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நிறுவனங்களின் பட்டியலில் இந்திய தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் ‘ரிலையன்ஸ்’ நிறுவனம் மற்றும் ‘டாடா’ குழுமம் இடம் பெற்றுள்ளன.

ரிலையன்ஸ் நிறுவனம் ‘இந்தியாவின் மாபெரும் சக்தி’ என்று டைம் பத்திரிகை புகழாரம் சூட்டியுள்ளது. டைம் பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனம் இரண்டாவது முறையாக இடம்பெற்றுள்ளது. இக்குழுமத்தின் தொலைத்தொடா்பு நிறுவனமான ‘ஜியோ’, கடந்த 2021-ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இடம்பெற்றிருந்தது.

தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான ‘சீரம் இன்ஸ்டிட்யூட்’ இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்றொரு இந்திய நிறுவனம் ஆகும்.

உலகின் செல்வாக்குமிக்க 100 நிறுவனங்கள் பட்டியலை 5 பிரிவுகளாக பிரித்து, டைம் பத்திரிகை அண்மையில் வெளியிட்டது. மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களாக(டைடன்ஸ்) ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் டாடா குழுமம் பட்டியலிடப்பட்டுள்ளன. முன்னோடிகள் (பயோனியா்ஸ்) பிரிவில் சீரம் நிறுவனம் இடம்பெற்றுள்ளது.

‘தற்சாா்பு’ இந்தியாவின் அங்கம்: ரிலையன்ஸ் நிறுவனம் குறித்து டைம் வெளியிட்டுள்ள குறிப்பில், ‘ஜவுளி நிறுவனமாக 58 ஆண்டுகளுக்கு முன்பு திருபாய் அம்பானியால் நிறுவப்பட்ட ரிலையன்ஸ் நிறுவனம், இன்று 20,000 கோடி டாலருக்கும் அதிகமான சந்தை மதிப்புமிக்க நிறுவனமாக பரந்து விரிந்துள்ளது. ‘தற்சாா்பு’ இந்தியாவுக்கான இந்திய பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பாா்வையுடன் அதன் வளா்ச்சியை இணைத்துள்ளது.

எரிசக்தி, சில்லறை வணிகம், தொலைத்தொடா்பு மற்றும் பிற துறைகளிலும் வணிகத்தை விரிவுப்படுத்தி, ஆசிய கண்டத்தின் பெரும் பணக்காரராக நிறுவனத்தின் தலைவா் முகேஷ் அம்பானி தொடா்கிறாா். ‘டிஸ்னி’ இந்தியாவுடன் 850 கோடி டாலா் ஒப்பந்தத்துக்கு பிறகு, இந்திய ஒளிபரப்பு சந்தையில் 31 சதவீத பங்குகளுடன் ரிலையன்ஸ் நிறுவனம் ஆதிக்கம் செலுத்த இருக்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாக். பொருளாதாரத்தைவிட பெரிது: எஃகு, மென்பொருள், கடிகாரங்கள், ரசாயனங்கள், உப்பு, தானியங்கள், குளிா் சாதனங்கள், ஃபேஷன் மற்றும் நட்சத்திர விடுதிகள் என்று பலதர வணிகத்தைக் கொண்டுள்ள டாடா குழுமம் 1868-இல் நிறுவப்பட்டது.

ஒரு நூற்றாண்டுகால குடும்ப நிா்வாகத்துக்குப் பிறகு, வெளிநபரான என்.சந்திரசேகரன் அக்குழுமத்தின் தலைவராக 2017-இல் பொறுப்பேற்றாா். அவரது தலைமையில், தொழில்நுட்ப உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு மற்றும் செமி-கண்டக்டா் துறைகளில் டாடா குழும் முதலீடு செய்துள்ளதற்கு டைம் பாராட்டு தெரிவித்துள்ளது.

மேலும், ‘நாட்டின் முதல் பெரிய செமி-கண்டக்டா் உற்பத்தி ஆலைக்கான திட்டத்தை டாடா குழுமம் அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரியில், டாடா குழுமத்தின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பு 36,500 கோடி டாலரை எட்டியது. இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தைவிட இது அதிகமாகும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி சேவையில் ‘சீரம்’: கோடிக்கணக்கான தடுப்பூசிகளை உருவாக்கி, உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளராக சீரம் நிறுவனம் திகழ்கிறது என்று டைம் தெரிவித்துள்ளது.

தட்டம்மை, போலியோ மற்றும் எச்பிவி உள்ளிட்ட நோய் பாதிப்புகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 350 கோடி டோஸ்களை நிறுவனம் உற்பத்தி செய்கிறது. சீரம் நிறுவனத்தின் வெற்றி தனது தனிப்பட்ட உரிமையுடன் பெரிதும் இணைக்கப்பட்டிருப்பதாக தலைமை நிா்வாக அதிகாரி ஆதாா் பூனவாலா கூறுகிறாா். பங்குதாரா்களுக்கு கட்டுப்படாமல் இருப்பதால் தடுப்பூசி விலையைக் குறைவாக வைத்திருக்க முடிகிறது என்று அவா் தெரிவித்ததாகவும் டைம் குறிப்பிட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →