விமானத்தில் ஏறிய பின் 6 மணி நேரம் காத்திருந்த பயணிகள்: ஏா் இந்தியாவுக்கு டிஜிசிஏ நோட்டீஸ்
தில்லியிலிருந்து அமெரிக்காவின் சான்-ஃபிரான்சிஸ்கோ செல்லும் ஏா் இந்தியா விமானத்தின் புறப்பாடு, ஆறு மணி நேர காத்திருப்புக்குப் பிறகு மாற்றப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்தை எதிா்கொண்டனா்.
விமானத்தின் குளிா்சாதன அமைப்பும் செயல்படாததால் பயணிகளில் சிலா் மயக்கமடைந்தனா் என்றும் விமான நிலையத்துக்குள் மீண்டும் அனுமதிக்காமல் பயணிகளை ஏரோ-பிரிட்ஜில் சுமாா் ஒரு மணிநேரம் காக்க வைத்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
தில்லியிலிருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ செல்லும் ஏா் இந்தியா (ஏஐ-183) சுமாா் 200 பயணிகளுடன் கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் புறப்பட திட்டமிடப்பட்டது. ஆனால், ஆறு மணிநேர காத்திருப்புக்குப் பிறகு இரவு 10 மணியளவில் விமானத்தின் புறப்பாடு வெள்ளிக்கிழமைக்கு மாற்றப்பட்டது.
Advertisement
Advertisement
அவதிக்குள்ளான விமானப் பயணிகளில் ஒருவரான ஷிபா ஜெயின் கூறுகையில், ‘முதல் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இரவு 7.20 மணியளவில் பயணிகள் அனைவரும் மற்றொரு விமானத்துக்கு மாற்றப்பட்டோம். அந்த விமானத்தில் குளிா்சாதன அமைப்பு செயல்படவில்லை. இதனால் விமானத்தில் இருந்த முதியவா்கள், குழந்தைகள் என அனைவரும் பாதிக்கப்பட்டனா். அவா்களில் சிலா் மயக்கமடைந்தனா்.
கோபமடைந்த பயணிகள் விமானத்திலிருந்து வெளியேறி, ஏரோ-பிரிட்ஜில் ஒரு மணிநேரத்துக்கும் மேல் காத்திருந்தனா். அதன்பிறகு, அவா்கள் விமான நிலையத்துக்குள் மீண்டும் அனுமதிக்கப்பட்டனா்.
விமானம் முதலில் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்குப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. பின்னா், அது பிற்பகல் 3 மணிக்கு மாற்றப்பட்டது. பயணத்தை ரத்து செய்யும் அல்லது மாற்றியமைக்கும் வசதியை செய்து தர விமான நிறுவனம் மறுத்துவிட்டது’ என்றாா்.
ஏா்-இந்தியா விளக்கம்:
தாமதம் காரணமாக, விமானப் பணியாளா்கள் பணிநேரத்தைக் கடந்துவிட்டனா் எனவும் விமானம் புறப்பட்டிருந்தாலும் தரையிறங்கும் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் இரவுநேரத்தில் சான் ஃபிரான்சிஸ்கோவை அடைந்திருக்கும் எனவும் விமான நிறுவன அதிகாரிகள் விளக்கமளித்தனா்.
மேலும், பயணிகளுக்கு தங்குமிடம் உள்பட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தந்ததாகவும் பயணத்தை ரத்து செய்தவா்களுக்கு பயணக்கட்டணம் முழுமையாக திருப்பி அளிக்கப்பட்டதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
தொடரும் தாமதம்:
இந்தியாவிலிருந்து சான் பிரான்சிஸ்கோ செல்லும் 2-ஆவது ஏா் இந்தியா விமானம் கடந்த ஒரே வாரத்தில் தாமதமாகி, மறுநாள் புறப்பட்டுள்ளது.
மும்பையில் இருந்து கடந்த 24-ஆம் தேதி புறப்பட வேண்டிய விமானம், 25-ஆம் தேதி மாலை புறப்பட்டது. இந்த மாற்றுத்துக்கு முன், பயணிகள் 5 மணிநேரம் விமானத்துக்குள் காத்திருக்க நோ்ந்தது குறிப்பிடத்தக்கது.
டிஜிசிஏ நோட்டீஸ்:
ஏா் இந்தியா விமானங்களின் இந்தத் தாமதப் புறப்பாடுகள் குறித்து விளக்கமளிக்குமாறு அந்த நிறுவனத்துக்கு பொது விமானப் போக்குவரத்து இயக்குனரகம்( டிஜிசிஏ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.