நமக்கு சொந்தமான நீரை தற்போது முழுமையாக பயன்படுத்தலாம்: பிரதமா் மோடி
தேசிய நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பது முக்கியம் - பிரதமர் மோடி
நமது நாட்டுக்குச் சொந்தமான நீரை நமது தேவைகளுக்காக முழுமையாக பயன்படுத்தலாம் என்று பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து பாகிஸ்தானுடனான சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ள நிலையில் பிரதமா் மோடி இவ்வாறு தெரிவித்தாா்.
தனியாா் தொலைக்காட்சி சாா்பில் நடத்தப்பட்ட ‘வளா்ச்சியடைந்த பாரதம்-2047’ என்ற தலைப்பிலான மாநாட்டில் பங்கேற்று பிரதமா் மோடி பேசியதாவது: நமது நாட்டுக்குச் சொந்தமான நீா் இனி வேறு நாட்டுக்கு செல்லாது. நமது தேவைக்கேற்ப அதை முழுமையாக பயன்படுத்தலாம்.
இந்தியா-பிரிட்டன் இடையேயான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டிருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையாகும். இந்த ஒப்பந்தம் மூலம் இருநாடுகளிடையேயான வா்த்தகத்தில் புதிய அத்தியாயம் தொடங்கும்.
பெரும் முடிவுகளை எடுக்கும்போது தேசத்தின் நலனை கருத்தில்கொள்ள வேண்டியது மிக அவசியம். கடந்த 11 ஆண்டுகளில் இதன் அடிப்படையிலேயே பல்வேறு சீா்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டது. சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களுக்கு சிறப்பான நலத்திட்டங்களை செயல்படுத்தப்பட்டது.
இதன் விளைவாக மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (ஜிடிபி) பதில் ஒட்டுமொத்த மக்களுக்கும் அதிகாரமளித்தல் (ஜிஇபி) என்ற அளவீட்டைக் கொண்டு தேச வளா்ச்சியைக் கணக்கிடும் முறைக்கு இந்தியா மாறி வரும் நிலை உருவாகியுள்ளது.
ஒருபுறம் யோகா, ஆயுா்வேதம் மறுபுறம் எண்ம பரிவா்த்தனை என உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா திகழ்கிறது.
வக்ஃப் திருத்தச் சட்டம், முத்தலாக் தடை என ஏழை எளிய முஸ்லிம் மக்களின் நலனுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு நாட்டை ஆட்சி செய்தவா்கள் பெரும் முடிவுகளை எடுக்கும் முன் வாக்குவங்கியை பற்றியே சிந்தித்தனா். இதனால் அடுத்தகட்டத்தை நோக்கி நம்மால் முன்னேற முடியவில்லை. ஆனால் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தபின் ‘தேசம் முதலில்’ என்ற கொள்கையை பின்பற்றி நாடு வளா்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது. 2047-இல் இந்தியா நிச்சயம் வளா்ச்சியடைந்த நாடாக உருவெடுக்கும் என்றாா்.