ஆபரேஷன் சிந்தூர்! புல்வாமா தாக்குதலுக்கு மூளையான பயங்கரவாதி கொலை
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பயங்கரவாதி அப்துல் ரவூப் அசார் கொல்லப்பட்டதாக தகவல்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, புல்வாமா உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களுக்கு மூளையாக இருந்த பயங்கரவாதி அப்துல் ரவூப் அசார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின்பேரில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது, பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது தலைமையகத்தின் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
Advertisement
Advertisement
இந்தத் தாக்குதலின்போது, தேடப்பட்டு வந்த அப்துல் ரவூப் அசாரின் குடும்பத்தினர் 10 பேர் பலியானதாக தெரிவித்த நிலையில், காயமடைந்திருந்த அப்துல் ரவூப் அசாரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர், 1999-ல் நடத்தப்பட்ட கந்தஹார் விமானக் கடத்தலில் மூளையாகச் செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பிலிருந்ததாகக் கூறி, 1994 ஆம் ஆண்டு மசூத் அசாரை காஷ்மீரில் இந்திய அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.
இதனைத் தொடர்ந்து, 1999, டிசம்பர் 24-ல், 154 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் நேபாளத்திலிருந்து புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை 5 பயங்கரவாதிகள் கடத்தினர். மேலும், கைது செய்யப்பட்டிருந்த மசூத் அசார் உள்பட 3 பயங்கரவாதிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்ததால், மசூத் அசார் விடுவிக்கப்பட்டார். விமானமும் மீட்கப்பட்டது. சகோதரர் மசூத் அசாரை மீட்க, தற்போது கொல்லப்பட்ட பயங்கரவாதி அப்துல் ரவூப் திட்டமிட்டு நடத்தியதே கந்தஹார் விமானக் கடத்தல் என்று கூறப்படுகிறது.
அப்துல் ரவூப் அசார் மற்றும் அவரது சகோதரரான மசூத் அசாரும்தான் இந்திய ராணுவ தலைமையகத் தாக்குதல், ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவை தாக்குதல், தில்லி நாடாளுமன்ற தாக்குதல், பதான்கோட் தாக்குதல், புல்வாமா தாக்குதல் உள்ளிட்டவற்றுக்கு காரணமாய் அமைந்தவர்கள்.
லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதியாக இருந்தவர் அப்துல் ரவூப் அசார், ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக, பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகளில் ஒருவராகவும் இருந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.