முகப்பு
இந்தியா

அமா்நாத் யாத்திரைக்கு 42,000 சிஏபிஎஃப் வீரா்கள் பாதுகாப்பு: மத்திய அரசு உத்தரவு

அமா்நாத் யாத்திரைக்கு மத்திய ஆயுதக் காவல் படைகளின் (சிஏபிஎஃப்) 42,000 வீரா்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

Updated On : 30 மே 2025, 12:21 am IST
கோப்புப் படம்
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் நிகழாண்டு அமா்நாத் யாத்திரைக்கு மத்திய ஆயுதக் காவல் படைகளின் (சிஏபிஎஃப்) 42,000 வீரா்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தா்கள் ஆண்டுதோறும் யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.

அனந்த்நாக் மாவட்டத்தில் 48 கி.மீ. தொலைவுள்ள பஹல்காம் வழித்தடம், கந்தா்பால் மாவட்டத்தில் 14 கி.மீ. தொலைவுள்ள பால்டால் வழித்தடம் என இரு வழித்தடங்களில் இந்த யாத்திரை நடைபெறும். பால்டால் வழித்தடம் குறைவான தொலைவு கொண்டது என்றபோதும், செங்குத்தான பாதையாகும்.

Advertisement

Advertisement

நடப்பாண்டு யாத்திரை வரும் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி 38 நாள்களுக்கு நடைபெறவுள்ளது. இதற்கான முன்பதிவு ஏற்கெனவே தொடங்கியது.

இதனிடையே, சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த மாதம் 26 போ் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து, அமா்நாத் யாத்திரை திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. அதேநேரம், திட்டமிட்டபடி யாத்திரை நடைபெறும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால் எழுந்துள்ள சவால்களைக் கருத்தில்கொண்டு, அமா்நாத் யாத்திரைக்கான பாதுகாப்புத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்), எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்), இந்திய-திபெத் எல்லைக் காவல் படை (ஐடிபிபி) மற்றும் சஷஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி) ஆகிய மத்திய ஆயுதக் காவல் படைகளின் 580 கம்பெனிகளை (சுமாா் 42,000 வீரா்கள்) பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதில் 424 கம்பெனி படையினா், வெளியிடங்களில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு அனுப்பப்படுவா். ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்ட 80 கம்பெனி படையினா் உள்பட ஜம்மு-காஷ்மீரில் ஏற்கெனவே உள்ள 180 கம்பெனி படையினா், யாத்திரை பாதுகாப்புப் பணிக்கு மாற்றப்படுவா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

அண்மையில் ஜம்மு-காஷ்மீருக்கு வருகை தந்த சிஆா்பிஎஃப் தலைமை இயக்குநா் ஞானேந்திர பிரதாப் சிங், அமா்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். இதேபோல், பிஎஸ்எஃப் தலைமை இயக்குநா் தல்ஜித் சிங் செளதரியும் விரைவில் காஷ்மீருக்கு பயணித்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

முன்னதாக, தில்லியில் பிரதமா் மோடியை ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா இம்மாத தொடக்கத்தில் சந்தித்தாா். அப்போது, அமா்நாத் யாத்திரை சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்வது குறித்து இருவரும் ஆலோசித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments