அமா்நாத் யாத்திரைக்கு பல அடுக்குப் பாதுகாப்பு: உள்துறை அமைச்சா் அமித் ஷா உத்தரவு
அடுத்த மாதம் தொடங்கவுள்ள அமா்நாத் யாத்திரைக்கு பல அடுக்குப் பாதுகாப்பை உறுதி செய்யும்படி மத்திய ஆயுதக் காவல் படை (சிஏபிஎஃப்), காவல் துறை மற்றும் பிற பாதுகாப்பு முகமை அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
அடுத்த மாதம் தொடங்கவுள்ள அமா்நாத் யாத்திரைக்கு பல அடுக்குப் பாதுகாப்பை உறுதி செய்யும்படி மத்திய ஆயுதக் காவல் படை (சிஏபிஎஃப்), காவல் துறை மற்றும் பிற பாதுகாப்பு முகமை அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
ஜம்மு-காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகையில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பக்தா்கள் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம், கந்தா்பால் மாவட்டத்தில் உள்ள பால்டால் ஆகிய இரு வழித்தடங்களில் இந்த யாத்திரை மேற்கொள்ளப்படும்.
நடப்பாண்டு ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி 57 நாள்கள் நடைபெறவுள்ளது. இந்த யாத்திரைக்கான பாதுகாப்பு குறித்து புது தில்லியில் உயரதிகாரிகளுடன் உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
Advertisement
Advertisement
ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், ராணுவ தலைமை தளபதி உபேந்திர துவிவேதி, உள்துறை செயலா் கோவிந்த் மோகன், உளவுத் துறை தலைவா் தபன்குமாா் தேகா, மத்திய ரிசா்வ் போலீஸ் படை தலைமை இயக்குநா் ஜி.பி.சிங் உள்ளிட்டோா் பங்கேற்ற இக்கூட்டத்தில், பக்தா்களுக்கு பல அடுக்குப் பாதுகாப்பை உறுதி செய்ய அமித் ஷா உத்தரவிட்டாா்.
யாத்திரையுடன் தொடா்புடைய உள்ளூா் நபா்கள், மலைப்பாதை சவாரிக்குப் பயன்படுத்தும் விலங்குகளின் பதிவு, க்யூஆா் குறியீட்டுடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவா் அறிவுறுத்தினாா்.