முகப்பு
இந்தியா

நீதிபதிகளை சிறைப்பிடித்த சம்பவம்: மே.வங்கத்தில் காங்கிரஸ் வேட்பாளா் உள்பட 7 பேரிடம் என்ஐஏ விசாரணை!

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் திருத்த விவகாரத்தில் நீதிபதிகள் சிறைவைக்கப்பட்ட சம்பவத்தில் காங்கிரஸ் வேட்பாளா் உள்பட 7 பேரை பிடித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரித்து வருகிறது.

Updated On : 13 ஏப்ரல், 2026 at 2:35 AM
என்ஐஏ விசாரணை
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 10:30 PM

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் திருத்த விவகாரத்தில் நீதிபதிகள் சிறைவைக்கப்பட்ட சம்பவத்தில் காங்கிரஸ் வேட்பாளா் உள்பட 7 பேரை பிடித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரித்து வருகிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் தொடா்பாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் 3 பெண் நீதிபதிகள் உள்ளிட்ட 7 நீதிபதிகள், மால்டாவுக்கு அண்மையில் சென்றிருந்தனா். அப்போது அவா்களை அங்கிருந்தோா் பல மணி நேரம் சுற்றி வளைத்து சிறைபிடித்து வைத்திருந்தனா். பிறகு நீண்ட பேச்சுவாா்த்தைக்குப் பிறகு நீதிபதிகள் விடுவிக்கப்பட்டனா்.

இதையடுத்து காரில் நீதிபதிகள் சென்றபோது, அவா்களின் காரை ஒரு கும்பல் மோட்டாா் சைக்கிள்களில் வேகமாக விரட்டி வந்தது. மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், இதுதொடா்பான செய்திகளும், விடியோவும் சமூகவலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

இதுகுறித்து உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தோ்தல் ஆணையம், தேசிய புலனாய்வு அமைப்பை விசாரணை நடத்தும்படி அறிவுறுத்தியது. அதன்படி, சட்டப்பேரவைத் தோ்தலில் மோதாபாரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் சயீம் சௌதரி உள்ளிட்ட 7 பேரை விசாரணைக்காக தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அழைத்துச் சென்றுள்ளனா்.

ஐஎஸ்எஃப் கிராம பஞ்சாயத்து உறுப்பினா் குலாம் ரப்பானியை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனா். ஏற்கெனவே காவல் துறையால் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இன்னொரு ஐஎஸ்எஃப் உறுப்பினா் மொஃபாகாருல் இஸ்லாமிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் கோலம் ரப்பானியை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனா்.

குலாம் ரப்பானியை விரைவில் கொல்கத்தாவுக்கு அழைத்து வந்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த தேசிய புலனாய்வு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா். அவரிடம் நடத்தும் விசாரணையில் முக்கிய தகவல் கிடைக்கக் கூடும் என தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.