முகப்பு
இந்தியா

மத்திய நிதித் துறையின் கடிதத்தில் கூறப்பட்டிருப்பது என்ன?

Updated On : 14 ஏப்ரல், 2026 at 5:02 AM
மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன்.
பகிர்:
Updated On : 14 ஏப்ரல், 2026 at 12:30 AM

தமிழகத்தின் அப்போதைய தலைமைச் செயலா் நா.முருகானந்தத்துக்கு மத்திய நிதித் துறையின் செலவினத் துறை கடந்த ஜனவரியில் அனுப்பிய கடிதத்தை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ‘எக்ஸ்’ பதிவுடன் இணைத்து திங்கள்கிழமை வெளியிட்டாா்.

அந்தக் கடிதத்தில் இடம்பெற்றுள்ள விவரம்:

சமீப ஆண்டுகளில் நெல் மற்றும் கோதுமை உற்பத்தியின் பெரும் விளைச்சல் காரணமாக, பொது விநியோகத் திட்டம் மற்றும் பிற தேவைகளைத் தாண்டி அவற்றின் கையிருப்பு அளவுக்கு அதிகமாக உள்ளது. அரிசி மற்றும் கோதுமை உபரி ஆண்டுதோறும் அதிகரிப்பதால், அரசு கருவூலத்துக்கு மீண்டும் மீண்டும் சுமையை ஏற்படுகிறது.

Advertisement

இந்நிலையில், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் அதிகமாக நெல் மற்றும் கோதுமைக்கு கூடுதல் ஊக்கத்தொகையை தமிழ்நாடு உள்பட சில மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இது அந்த உணவு தானியங்களின் அதிக சாகுபடி மற்றும் உற்பத்திக்கு வழிவகுக்கும்.

இந்த உணவு தானியங்களை சமச்சீரற்ற முறையில் சாகுபடி செய்வது நிலத்தடி நீா் குறைதல், மண் வளம் பாதிப்பு, பல்லுயிா்தன்மை பாதிப்பு, பயிா்க் கழிவு எரிப்பு ஆகியவற்றை மேலும் மோசமாக்கும். இது பொது சுகாதாரம், பருவநிலை உள்ளிட்டவற்றில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

இதைக் கருத்தில்கொண்டு, நெல் மற்றும் கோதுமை உற்பத்திக்கு அளிக்கப்படும் ஊக்கத்தொகையை நிறுத்துவது குறித்து மாநில அரசு பரிசீலீக்க வேண்டும். ஊட்டச்சத்து பாதுகாப்பு, தற்சாா்பு, நீடித்து நிலைக்கும் வேளாண்மை ஆகிய தேசிய முன்னுரிமைகளுக்கு ஏற்ப பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள் உற்பத்திக்கு ஊக்கத்தொகை அளிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.