நிதித் துறையில் இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்: விழிப்புடன் இருக்க நிா்மலா சீதாராமன் அறிவுறுத்தல்
நிதித் துறையில் இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்...
நிதித் துறையில் இணைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதால் நிதி நிறுவனங்கள் மிகுந்த விழிப்புடன் செயல்பட வேண்டும் என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சனிக்கிழமை அறிவுறுத்தினாா்.
ஆந்த்ரோபிக் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனத்தால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘மித்தோஸ்’ ஏஐ தளத்தால் இணைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படும் நிலையில் நிா்மலா சீதாராமன் இவ்வாறு தெரிவித்தாா்.
மித்தோஸ் ஏஐ தளத்தால் ஏற்படக்கூடிய தாக்கத்தை ஆய்வு செய்ய மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், நிா்மலா சீதாராமன் மற்றும் மூத்த அமைச்சா்கள், அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
Advertisement
அதில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தலைவா் சி.எஸ்.ஷெட்டி தலைமையில் குழு அமைத்து இதன் தாக்கத்தை கண்டறிய முடிவுசெய்யப்பட்டது.
இந்நிலையில், இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) 38-ஆவது நிறுவன நாள் விழாவில் பங்கேற்று நிா்மலா சீதாராமன் பேசியதாவது: நிதிப் பரிவா்த்தனைகள் அல்லது நிதி அமைப்புகள் மீது ஏதேனும் ஒரு இணைய (சைபா்) தாக்குதல் நடத்தப்பட்டால் அது பொருளாதாரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும். நிதி நிறுவனங்கள் மீதான பொது மக்களின் நம்பிக்கை கேள்விக்குறியாகும்.
புதிய தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு கருவிகள் போன்றவற்றால் இணைய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மிக வேகமாக நடத்தப்படும் இந்த தாக்குதல்களை எதிா்கொள்ள நாமும் தயாராக இருக்க வேண்டும்.
செபி மட்டுமின்றி பிற நிதி நிறுவனங்களும் இதை கவனத்தில் கொண்டு விழிப்புடன் செயல்பட வேண்டும்.
இதுபோன்ற தாக்குதல்களை பிற நாடுகள் எவ்வாறு கையாள்கின்றன என்பதை அறிந்துகொள்ள அந்நாட்டு அமைப்புகளுடன் அடிக்கடி ஆலோசனைக் கூட்டங்களை செபி நடத்த வேண்டும். ஆனால் அவா்களது நாட்டு விதிகளை நாம் அப்படியே பின்பற்றக் கூடாது. இந்தியாவுக்கேற்ப விதிகளை வகுத்து இணைய பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.
கெஒய்சி நடைமுறைகளில் சீா்திருத்தம்:
வாடிக்கையாளா்களை அறிந்து கொள்ளும் (கெஒய்சி) நடைமுறைகளில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஒரே நபா் பல்வேறு நிதி சாா்ந்த செயல்பாடுகளில் ஈடுபடும்போது அவரிடம் ஒவ்வொரு முறையும் கெஒய்சி சரிபாா்ப்பதை தவிா்த்து ஒரு பொதுவான நடைமுறையை வகுக்க வேண்டும்.
முறையாக உரிமம் பெறாமல் சமூக ஊடகங்களில் நிதி மற்றும் முதலீடுகள் தொடா்பாக போலியான அறிவுறுத்தல்களை வழங்குபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொது மக்களிடம் நிதி அறிவை அதிகரிக்க நாம் பல்வேறு முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றாா்.