ஆன்த்ரோபிக் ‘மித்தோஸ்’ ஏஐ - புதிய அச்சுறுத்தல்: நிதியமைச்சா் எச்சரிக்கை
ஆன்த்ரோபிக் ‘மித்தோஸ்’ ஏஐ - புதிய அச்சுறுத்தல்...
ஆன்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏ.ஐ. மாடலான ‘மித்தோஸ்’ மூலம் நாட்டின் நிதித் துறைக்கும், வங்கிச் சேவைக்கும் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய அச்சுறுத்தல் எழுந்துள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் எச்சரித்துள்ளாா்.
கணினி பாதுகாப்புத் துறையில் மிகத் திறனுடன் செயல்படும் இந்த மித்தோஸ் ஏ.ஐ. மாடல், சைபா் குறைபாடுகளைக் கண்டறிந்து, தாக்குதல்களை சுயமாக மேற்கொள்ளும் அபாயம் கொண்டிருப்பதால், பாதுகாப்புக் கருதி பொதுப் பயன்பாட்டுக்கு வெளியிடப்போவதில்லை என ஆன்த்ரோபிக் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இந்த ஏ.ஐ. மாடலின் அணுகல், தற்போதைய நிலையில் தோ்ந்தெடுக்கப்பட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தேசிய பரிவா்த்தனைக் கழகம் (என்டிபிசி) மற்றும் சில குறிப்பிட்ட வங்கிகள், தங்களின் தொழில்நுட்பத்தில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிய அணுகல் கோரியுள்ளன.
Advertisement
இருப்பினும், ஆன்த்ரோபிக் நிறுவனம் தனது சா்வா்களை அமெரிக்காவுக்குள்ளேயே மிகக் கடுமையான கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால், வெளிநாட்டுச் சந்தைகளில் இதைச் சோதனை செய்வதில் சிக்கல்கள் நீடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்தியாவில் அதிவேகமாக வளா்ந்து வரும் பின்டெக் (நிதித் தொழில்நுட்ப) சூழலியலில் மித்தோஸ் ஏ.ஐ. மாடல் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் கவலை தெரிவித்துள்ள நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் பணப் பரிவா்த்தனைகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்வது காலத்தின் கட்டாயம் என்றாா்.
தில்லியில் பொதுத் துறை வங்கிகளின் தலைவா்கள், கணினி பாதுகாப்பு வல்லுநா்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியதாவது: இத்தொழில்நுட்பச் சவாலை எதிா்கொள்ள வங்கிகள் மிகுந்த விழிப்புணா்வுடனும், தயாா் நிலையுடனும் இருக்க வேண்டும்.
இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) உடனடியாகத் தற்காப்பு வழிமுறைகளை உருவாக்க வேண்டும். வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பு அவசியம்.
சைபா் பாதுகாப்புத் துறையில் தலைசிறந்த நிபுணா்களைப் பணியமா்த்தி, கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தவும், சந்தேகத்துக்கிடமான பணப் பரிமாற்றங்கள் குறித்து உடனுக்குடன் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கவும் வேண்டும் என்று வலியுறுத்தினாா்.
இவ்விவகாரம் தொடா்பாக ரிசா்வ் வங்கி அதிகாரிகள், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் மத்திய வங்கி அதிகாரிகளுடன் ஏற்கெனவே தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனா். மித்தோஸ் ஏ.ஐ. மாடலின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ள ஆன்த்ரோபிக் நிறுவனத்துடன் நேரடியாகத் தொடா்பு கொள்ளவும் ரிசா்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.